ராஜஸ்தானில் பாரதீய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை பறித்தது, காங்கிரஸ் புதிய முதல்–மந்திரி யார்?


ராஜஸ்தானில் பாரதீய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை பறித்தது, காங்கிரஸ் புதிய முதல்–மந்திரி யார்?
x
தினத்தந்தி 11 Dec 2018 11:35 PM GMT (Updated: 11 Dec 2018 11:35 PM GMT)

ராஜஸ்தானில் பாரதீய ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறித்தது. புதிய முதல்–மந்திரியாக அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு பெற வாய்ப்பு உள்ளது.

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தானில் முதல்–மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வந்தது.

அங்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வந்தது. இந்த முறை அதை முறியடித்துக் காட்ட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி தீவிர முனைப்பு காட்டியது. பிரதமர் நரேந்திர மோடியும், பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷாவும் தீவிர பிரசாரம் செய்தனர்.

ஆனால் காங்கிரஸ் கட்சி, தேர்தல்தோறும் ஆட்சி மாற்றம் என்பதை பயன்படுத்தி, இந்த முறை வெற்றி பெற்று விட வேண்டும் என்று தீவிரம் காட்டியது.

இந்த நிலையில் அங்கு கடந்த 7–ந் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 200 இடங்களில், ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லட்சுமன் சிங் மரணம் அடைந்ததால் அங்கு மட்டும் தேர்தல் ஒத்தி போடப்பட்டது.

எஞ்சிய 199 இடங்களில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறினாலும், காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது.

இங்கு வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்களில் பலர் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் என்பதால், அவர்களுடைய ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. இந்த மாநிலத்தில் பாரதீய ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை பறித்துள்ளது.

ராஜஸ்தானில் வழக்கம் போல தேர்தல்தோறும் ஆட்சி மாற்றம் என்பது இந்த முறையும் பலித்துள்ளது.

இங்கு பாரதீய ஜனதா கட்சிக்கு 73 இடங்களும், பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு 27 இடங்களும் கிடைத்தன.

முதல்–மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தனது ஜல்ராபட்டன் தொகுதியில் சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜெய்ப்பூரில் இன்று (புதன்கிழமை) சட்டசபை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் சட்டசபை காங்கிரஸ் தலைவர் (முதல்–மந்திரி) தேர்வு செய்யப்படுகிறார்.

இதற்காக அந்த கட்சியின் மேலிட பார்வையாளர் கே.சி.வேணுகோபால் அங்கு சென்றுள்ளார். கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் கலந்து ஆலோசனை செய்து விட்டு புதிய முதல்–மந்திரி யார் என முடிவு செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் முன்னாள் முதல்–மந்திரி அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகிய இருவரது பெயர்களும் அடிபடுகின்றன. இருவரில் ஒருவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story