3 பொதுத்துறை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு: 21–ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம்


3 பொதுத்துறை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு: 21–ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 11 Dec 2018 11:49 PM GMT (Updated: 11 Dec 2018 11:49 PM GMT)

3 பொதுத்துறை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 21–ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கொல்கத்தா, 

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சவுமியா தத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:–

பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆப் பரோடா, விஜயா பேங்க் மற்றும் தேனா பேங்க் ஆகியவற்றை இணைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும். மண்டல கிராம வங்கிகளை ஒன்றாக இணைக்கக்கூடாது. இவ்வாறு இணைத்தால் அந்த வங்கிகளின் நூற்றுக்கணக்கான கிளைகளை மூடவேண்டிய நிலை ஏற்படும். இதனால் கிராமப்புற சேவையில் கடன் சுமை அதிகரிக்கும்.

மேலும் விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இதேபோல புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும். பணியின்போது வங்கி அதிகாரிகள் தாக்கப்படும் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்ற எங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி 21–ந்தேதி நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். எங்களுடைய சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் இதில் பங்கேற்பார்கள். வேலை நிறுத்தத்தின்போது மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய மையங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

மேலும் அனைத்து வங்கி கிளைகளிலும் மதிய சாப்பாடு இடைவெளி மற்றும் மாலை நேரங்களில் பேரணி, போராட்டங்களும் நடத்தப்படும். இதேபோல டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் தர்ணா போராட்டமும் நடைபெறும். இறுதியில் எங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய நிதி மந்திரியிடம் சமர்ப்பிக்கப்படும். இந்த போராட்டத்தில் அனைத்து ஊழியர்களும் பங்கேற்று வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெறவைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story