விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவு: இங்கிலாந்து அதிகாரிகளுக்கு இந்தியா பாராட்டு


விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவு: இங்கிலாந்து அதிகாரிகளுக்கு இந்தியா பாராட்டு
x
தினத்தந்தி 11 Dec 2018 11:51 PM GMT (Updated: 11 Dec 2018 11:51 PM GMT)

தொழில் அதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கில் உதவிய இங்கிலாந்து அதிகாரிகளுக்கு இந்தியா பாராட்டு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி, 

தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். இது தொடர்பாக அமலாக்க துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து அதிகாரிகள் மூலமாக இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் நடந்து வந்தது. இங்கிலாந்து கோர்ட்டு நேற்று முன்தினம் அளித்த பரபரப்பு தீர்ப்பில், விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம் என உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை மத்திய மந்திரி அருண் ஜெட்லி, பா.ஜ.க. தேசிய செயலாளர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் வரவேற்றனர். அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘‘ஊழலை ஒழிக்க இந்தியா எடுத்து வரும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த பெருமை அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியையே சாரும்’’ என பாராட்டு தெரிவித்தார்.

அதே சமயம் தீர்ப்பு குறித்து விஜய் மல்லையா கூறுகையில், ‘‘இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மேல்முறையீடு செய்ய எங்களுக்கு 14 நாட்கள் அவகாசம் தரப்பட்டு உள்ளது’’ என்றார்.

இதனிடையே இந்த தீர்ப்பு குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பாக இங்கிலாந்து கோர்ட்டு அளித்த தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. இந்த வழக்கில் உதவிய இங்கிலாந்து அதிகாரிகளுக்கு எங்களுடைய பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம்.

மிக விரைவில் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story