தெலுங்கானாவின் முதல் மந்திரியாக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்பு


தெலுங்கானாவின் முதல் மந்திரியாக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்பு
x
தினத்தந்தி 12 Dec 2018 3:37 AM GMT (Updated: 12 Dec 2018 3:37 AM GMT)

தெலுங்கானாவின் முதல் மந்திரியாக சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்று கொள்கிறார்.

ஐதராபாத்,

ஆந்திராவை இரண்டாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது.

அங்கு முதல்-மந்திரியாக இருந்த சந்திரசேகர ராவ், தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.

இப்போது அங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.

இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பாரதீய ஜனதாவுக்கு ஒரு இடம் கிடைத்தது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த நிலையில், தெலுங்கானாவின் முதல் மந்திரியாக தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்று கொள்கிறார்.

Next Story