பா.ஜனதா இல்லாத இந்தியா என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது -சிவசேனா விமர்சனம்


பா.ஜனதா இல்லாத இந்தியா என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது -சிவசேனா விமர்சனம்
x
தினத்தந்தி 12 Dec 2018 10:49 AM GMT (Updated: 12 Dec 2018 11:27 AM GMT)

பா.ஜனதா இல்லாத இந்தியா என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.

மும்பை,

பா.ஜனதா ஆட்சிசெய்த மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கரில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இது பா.ஜனதாவிற்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறது.

பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என விமர்சனம் செய்துள்ளது சிவசேனா. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது பா.ஜனதாவின் கோஷமாகும். தேர்தல் முடிந்ததும் ராகுல் காந்தி பேசுகையில், நாங்கள் யாரும் இல்லாத இந்தியா என்றெல்லாம் பேசமாட்டோம் என கூறியிருந்தார். இப்போது இதே விவகாரத்தை சிவசேனா முன்வைத்து பா.ஜனதாவை வறுத்தெடுத்துள்ளது.
 
பா.ஜனதாவை தவிர்த்து வேறு  எந்த கட்சியும் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது, மக்கள் தங்கள் ஆட்சியை விரும்புகிறார்கள் என்கிற மூடநம்பிக்கையை உடைத்திருக்கிறது. வானத்தில் பறந்து கொண்டிருந்தவர்களை மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் தரைக்கு இழுத்துள்ளனர். நாடு நான்கு, ஐந்து தொழில் அதிபர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிர்வகிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி போன்ற முக்கிய அரசு நிறுவனங்கள் சிதைக்கப்படுகிறது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று கூறினார்கள். ஆனால்  பா.ஜனதா ஆட்சி செய்த மாநிலங்களிலே  பா.ஜனதா இல்லாத காலத்தை உருவாக்கி உணர்த்திவிட்டார்கள். ராஜஸ்தானில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டார்கள்.

மத்திய பிரதேசத்தில் விளைபொருட்களுக்கு உரிய விலை கேட்ட விவசாயிகள் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டனர்.  இதற்கு மக்கள் தேர்தலில் பழிதீர்த்துவிட்டார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியது. ஏராளமானோர் வேலை இழந்தனர். பணவீக்கம் அதிகரித்தது. ஆனால் பிரதமர் மோடியோ உலக நாடுகளுக்கு பறந்தார்.  4 மாநிலத் தேர்தலுக்காக வெளிநாடுகளில் இருந்தபடியே வந்தார். மோடி பேசிய பல வார்த்தைகள் தற்போது அவருக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முதலில் வரவேற்றார். இறுதியில் அவரே அரசின் செயல்பாடுகளால் சோர்வடைந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என சிவசேனா தன்னுடைய கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் தெரிவித்துள்ளது.

Next Story