மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்? ராகுல் காந்தி அறிவிக்கிறார்


மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் முதல்வர் யார்? ராகுல் காந்தி அறிவிக்கிறார்
x
தினத்தந்தி 12 Dec 2018 3:20 PM GMT (Updated: 12 Dec 2018 3:20 PM GMT)

மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தானில் முதல்வர் யார்? என்பதை ராகுல் காந்தி அறிவிக்கிறார்.


பா.ஜனதா ஆட்சி செய்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் கட்சி தேர்தலை எதிர்க்கொண்டது. இப்போது முதல்வர் யார்? என்பது தொடர்பாக முடிவெடுக்கும் பெரும் பொறுப்பு காங்கிரஸ் தலைமையில் கொடுக்கப்பட்டுள்ளது.  இளம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸில் சச்சின் பைலட்டும், மத்திய பிரதேசத்தை பொறுத்தவரையில் ஜோதிராதித்ய சிந்தியாவும் முக்கிய தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்களை மாநில தலைமையில் அமரவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

ராஜஸ்தானில் 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை இழப்பதற்கு காரணமே சச்சின் பைலட் மற்றும் முன்னாள் முதல்வர் அசோக் கெலட் இடையிலான மோதல் போக்கே என்று கூறப்பட்டது.  மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் அவினாஷ் பாண்டே மற்றும் கண்காணிப்பாளர் கேசி வேணுகோபால் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சச்சின் பைலட்டும், அசோக் கெலாட்டும் கலந்து கொண்டுள்ளனர். கூட்டம் தொடர்ந்து நடைபெறும் நிலையில் ராஜஸ்தானில் முதல்வரை ராகுல் காந்திதான் தேர்வு செய்ய வேண்டும்  என்று எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசுகையில், “எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. மாநில முதல்வர் யார்? என்பது தொடர்பாக முடிவு எடுக்கும் பொறுப்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார். முதல்வர் யார் என்பது இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.  

மற்ற அனைத்து மாநிலங்களை விட  மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்கள் இடையே பல கோஷ்டிகள் உள்ளன. இதில், கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியாவும் முதல்வர் போட்டியில் முதன்மையில் உள்ளனர். அங்கும் முதல்வரை தேர்வு செய்யும் பொறுப்பு ராகுலிடம் சென்றுள்ளது.  மத்திய பிரதேசத்திலிருந்து பிரிந்த சத்தீஷ்காரில் 15  ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் வெற்றிப்பெற்றுள்ளது.   அங்கு காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகேல், எதிர்கட்சி தலைவராக இருந்த டி.எஸ்.சிங் தியோ, பாராளுமன்ற எம்.பி. தம்ரத்வாஜ் சாஹு மற்றும்  சரண் தாஸ் மஹந்த் ஆகியோர் முதல்வருக்கான போட்டி வரிசையில் உள்ளனர்.  மூன்று மாநிலங்களிலும் முதல்வரை தேர்வு செய்யும் பொறுப்பு ராகுல் காந்தியிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே  ராஜஸ்தானில் அசோக் கெலாட்டும், மத்திய பிரதேசத்தில் கமல்நாத்தும், சத்தீஷ்கரில் பூபேஷ் பகேலும் முதல்வராக வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story