மத்திய பிரதேசத்தில் ஆட்சியை இழந்தபோதும் பா.ஜனதாவுக்கு காங்கிரசை விட அதிக ஓட்டு


மத்திய பிரதேசத்தில் ஆட்சியை இழந்தபோதும் பா.ஜனதாவுக்கு காங்கிரசை விட அதிக ஓட்டு
x
தினத்தந்தி 12 Dec 2018 11:06 PM GMT (Updated: 12 Dec 2018 11:06 PM GMT)

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்த போதிலும் பா.ஜனதா அதிக சதவீத ஓட்டுகளை பெற்று இருப்பது தெரிய வந்து உள்ளது.

போபால், 

230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 28-ந்தேதி தேர்தல் நடந்தது. தேர்தலில் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நிலவிய கடும் போட்டி ஓட்டு எண்ணிக்கையின் போதும் வெளிப்பட்டது.

நேற்று முன்தினம் காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்தன. குறிப்பாக 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்த நிலை காணப்பட்டது.

இதனால் முதலில் பா.ஜனதா முந்துவதும், பிறகு காங்கிரஸ் முன்னிலை பெறுவதும் என இழுபறி ஏற்பட்டது. இந்த நிலை கடைசி சில ஆயிரம் ஓட்டுகளை எண்ணி முடிக்கும் வரை நீடித்தது.

இதனால் ஓட்டுகள் மெதுவாகவே எண்ணப்பட்டன. முடிவுகளை அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. மேலும், ஆட்சி அமைக்கத் தேவையான 116 தொகுதிகள் இரு கட்சிகளுக்குமே கிடைக்கவில்லை.

நேற்று அதிகாலையில்தான் 230 தொகுதிகளுக்கான முடிவுகளையும் தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இறுதி நிலவரப்படி காங்கிரஸ் 114 தொகுதிகளில் வெற்றி கண்டது.

பா.ஜனதா 109, பகுஜன் சமாஜ் 2, சமாஜ்வாடி 1, சுயேச்சைகளுக்கு 4 இடங்களும் கிடைத்தன.

இந்த தேர்தலில் பா.ஜனதாவை விட காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே கூடுதலாக வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து உள்ளது. அதேநேரம் இரு கட்சிகளும் வாங்கிய ஓட்டு சதவீதத்தை கணக்கில் கொண்டால் இதில் காங்கிரசை பா.ஜனதா பின்னுக்குத் தள்ளி உள்ளது.

பதிவான மொத்த ஓட்டுகளில் காங்கிரஸ் 40.9 சதவீத ஓட்டுகளை (1 கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 153 ஓட்டுகள்) பெற்றது. அதேநேரம் பா.ஜனதாவுக்கு 41 சதவீத வாக்குகள் (1 கோடியே 56 லட்சத்து 42 ஆயிரத்து 980 ஓட்டுகள்) கிடைத்து உள்ளன.

இது காங்கிரசை விட 0.10 சதவீதம் அதிகம் ஆகும். ஓட்டுகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் காங்கிரசை விட பா.ஜனதா 47,827 ஓட்டுகள் கூடுதலாக பெற்று உள்ளது.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளை கைப்பற்றியது. அக்கட்சிக்கு பதிவான மொத்த வாக்குகளில் 1 கோடியே 39 லட்சத்து 35 ஆயிரத்து 201 ஓட்டுகளும் (39.3 சதவீதம்), 73 இடங்களில் வென்ற பா.ஜனதாவுக்கு 1 கோடியே 37 லட்சத்து 57 ஆயிரத்து 502 வாக்குகளும் (38.8 சதவீதம்) கிடைத்தன.

அதாவது பா.ஜனதாவை விட காங்கிரஸ் ½ சதவீத ஓட்டுகள் (1,77,699 வாக்குகள்) கூடுதலாக பெற்றுள்ளது. அதேநேரம் பா.ஜனதாவை விட காங்கிரஸ் அதிகமாக 26 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசத்தில் தேர்தல் தோல்விக்கு பா.ஜனதாவின் பதவி விலகும் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பொறுப்பேற்று உள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “மாநிலத்தில் பா.ஜனதா தோல்வி கண்டதற்கு முழுக்க முழுக்க நானே காரணம். கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். மக்களும் எங்கள் மீது அன்பு செலுத்தினர். அதிக ஓட்டுகளை பெற்றபோதிலும் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எங்களால் அடைய முடியவில்லை” என்றார்.


Next Story