மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம்


மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம்
x
தினத்தந்தி 13 Dec 2018 12:15 AM GMT (Updated: 12 Dec 2018 11:44 PM GMT)

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டுள்ளது. முதல்-மந்திரியை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் எம்.எல்.ஏ.க்கள் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

இந்த தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மிசோரமில் மிசோ தேசிய முன்னணி அபார வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை பறித்தது.

பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான் (வசுந்தரா ராஜே சிந்தியா), மத்திய பிரதேசம் (சிவராஜ் சவுகான்), சத்தீஷ்கார் (ராமன் சிங்) ஆகிய 3 மாநிலங்களிலும், ஆட்சியை தக்க வைக்க தவறியது. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ஆட்சி அமைப்பதில் அந்தக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

ராஜஸ்தானில் மொத்த இடங்கள் 200. ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்தது. பாரதீய ஜனதா கட்சிக்கு 73 இடங்களும், பிற சிறிய கட்சிகளுக்கும், சுயேச்சைகளுக்கும் 27 இடங்களும் கிடைத்தன.

இங்கு ஆட்சி அமைக்க 100 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய லோக்தளம் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. எனவே ஆட்சி அமைக்க தேவையான பலம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது.

இங்கு முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகிய இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நேற்று காலை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மாநில பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டேயும், மேலிட பார்வையாளராக கே.சி.வேணுகோபாலும் கலந்துகொண்டனர். அவர்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசி அவர்களது கருத்துக்களை அறிந்தனர். அதைத் தொடர்ந்து முதல்-மந்திரியை கட்சித்தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்ய அதிகாரம் வழங்கி அசோக் கெலாட் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நிறைவேறியது.

மாலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மீண்டும் நடந்தது. அதில் புதிய முதல்-மந்திரி தேர்வை ராகுல் காந்தியின் முடிவுக்கு விடுவதென உறுதி செய்யப்பட்டது. அசோக் கெலாட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்த இடங்கள் 230. அங்கு காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் மாறி மாறி கூடுதல் இடங்களை பிடித்து, கடும் இழுபறி நிலவி வந்தது. கடைசியில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்தது. பாரதீய ஜனதா கட்சிக்கு 109 இடங்கள் கிடைத்தன. பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், சமாஜ்வாடி 1 இடத்திலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவைப்படுகின்றன. 114 இடங்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் 2 உறுப்பினர்களும், சமாஜ்வாடி கட்சியின் ஒரு உறுப்பினரும், 4 சுயேச்சை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆக, காங்கிரஸ் கட்சிக்கு 121 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்து விட்டது. எனவே ஆட்சி அமைப்பதில் சிக்கல் எதுவும் இல்லை.

இந்த நிலையில் கவர்னர் ஆனந்தி பென் பட்டேலை சிவராஜ் சவுகான் நேற்று சந்தித்து தனது மந்திரிசபையின் ராஜினாமாவை சமர்ப்பித்தார். அதை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.

கவர்னர் ஆனந்தி பென்பட்டேலை மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய் சிங் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

அதைத் தொடர்ந்து மாலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் மேலிட பார்வையாளராக முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி கலந்துகொண்டார். அவர் எம்.எல்.ஏ.க்களை தனித்தனியாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

பின்னர் முதல்-மந்திரி யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கி மூத்த உறுப்பினர் ஆரிப் ஏக்கெல் தீர்மானம் கொண்டுவந்தார். அது நிறைவேறியது. இதுகுறித்து ராகுல் காந்தியிடம் ஏ.கே.அந்தோணி தெரிவிப்பார். இங்கு கமல்நாத்துக்குத்தான் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சத்தீஷ்கார் மாநிலத்தில் மொத்த இடங்கள் 90. காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் அபார வெற்றி பெற்று மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை இடங்களுடன் ஆட்சியைப் பிடித்தது. பாரதீய ஜனதாவுக்கு 15 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 இடங்களும், முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரி அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரசுக்கு 5 இடங்களும் கிடைத்தன.

இங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று இரவு 8 மணிக்கு ராய்ப்பூரில் நடந்தது. இதில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளரும் மாநில பொறுப்பாளருமான பி.எல். புனியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சத்தீஷ்காரில் டாம்ரத்வாஜ் சாகு என்ற எம்.பி., சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முதல்-மந்திரி பதவி போட்டியில் அவரும், மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகேலும், மூத்த தலைவர் டி.எஸ். சிங்தேவும் உள்ளனர்.

மேலிட பார்வையாளர்கள் இருவரும் அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் பேசி கருத்து அறிந்தனர். அதைத் தொடர்ந்து புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சி மேலிடத்துக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றினர். இங்கு பூபேஷ் பாகேலுக்கு வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

எனவே 3 மாநிலங்களிலும் முதல்-மந்திரிகள் யார், யார் என்பதை ராகுல் காந்தி முடிவு செய்து, இன்று அல்லது நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து 3 மாநிலங்களிலும் புதிய ஆட்சிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் சூடுபிடிக்கும்.


Next Story