டெல்லியில் பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி கூட்டம் தொடங்கியது


டெல்லியில் பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி கூட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 13 Dec 2018 4:51 AM GMT (Updated: 13 Dec 2018 4:53 AM GMT)

டெல்லியில் பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது.  இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 8ந்தேதி முடியும்.  முதல் நாள் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

தொடர்ந்து நேற்று நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மக்களவையில் பல்வேறு விவகாரங்களை எழுப்பின.  ராமர் கோவில் விவகாரம், ரபேல் போர் விமான பேரம், காவிரி விவகாரம் என பல்வேறு விவகாரங்களை காங்கிரஸ், சிவசேனா, தெலுங்கு தேச கட்சி மற்றும் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அவையில் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.  இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.  இதனை தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ரபேல் பேரம், ரிசர்வ் வங்கி விவகாரம் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றின் மீது காங்கிரஸ் எம்.பி. சார்பில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அவை நடவடிக்கைகளை சுமுக முறையில் நடத்துவதற்காகவும், 5 மாநில சட்டசபை தேர்தல் தோல்விகள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தல் பிரசாரத்துக்கு தயாராவது பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காகவும் டெல்லியில் பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் நாடாளுமன்ற நூலக கட்டிடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதேபோன்று மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், பிரகாஷ் ஜவடேகர், கிரெண் ரிஜிஜு, ரவி சங்கர் பிரசாத் ஆகியோரும் வந்துள்ளனர்.

Next Story