நிர்பயா வழக்கு; குற்றவாளிகளுக்கு உடனடி மரண தண்டனை நிறைவேற்ற கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


நிர்பயா வழக்கு; குற்றவாளிகளுக்கு உடனடி மரண தண்டனை நிறைவேற்ற கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 13 Dec 2018 6:54 AM GMT (Updated: 13 Dec 2018 6:54 AM GMT)

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் உடனடி மரண தண்டனை நிறைவேற்ற கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந்தேதி நள்ளிரவு, நிர்பயா (கற்பனை பெயர்) என்ற மருத்துவ மாணவி, 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டு, சாலையில் வீசப்பட்ட அவர், சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி, டிசம்பர் 29–ந்தேதி உயிரிழந்தார்.

இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக ராம்சிங், அக்‌ஷய் தாக்குர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் மற்றும் இளம் குற்றவாளி ஒருவர் என 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2013–ம் ஆண்டு மார்ச் மாதம் திகார் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இளம் குற்றவாளி சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.

இந்த வழக்கை விசாரித்த கீழ்கோர்ட்டு, 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.  ஐகோர்ட்டும், தூக்கு தண்டனையை உறுதி செய்தது.  இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதன் மீது நடந்த விசாரணையில் இந்த தீர்ப்பினை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.

இந்த நிலையில், நிர்பயா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுபற்றி நீதிபதிகள் மதன் பி. லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.  இதில் அவர்கள், எதுபோன்ற கோரிக்கையை நீங்கள் வைக்கிறீர்கள்?  நீங்கள் நீதிமன்றத்தினை ஒரு நகைச்சுவை ஆக்குகிறீர்கள் என கூறினர்.  தொடர்ந்து இந்த மனுவை அவர்கள் தள்ளுபடி செய்துள்ளனர்.

Next Story