மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வேட்டுவைத்த நோட்டா!


மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வேட்டுவைத்த நோட்டா!
x
தினத்தந்தி 13 Dec 2018 12:12 PM GMT (Updated: 13 Dec 2018 12:18 PM GMT)

மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு நோட்டா வேட்டு வைத்தது தெரியவந்துள்ளது.

போபால்,

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் இந்தி பேசும் மற்றும் நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகியவற்றில் ஆளும் கட்சியான பா.ஜனதா தோல்வி கண்டு காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இது மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து உள்ளது.

இந்த முடிவுகளின் தாக்கம் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று அனைத்து தரப்பினரும் கருதுகின்றனர். 
 
இறுதிவரை இழுபறி 

230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 28–ந்தேதி தேர்தல் நடந்தது. தேர்தலில் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நிலவிய கடும் போட்டி ஓட்டு எண்ணிக்கையின் போதும் வெளிப்பட்டது. நேற்று முன்தினம் காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்தன. குறிப்பாக 20–க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்த நிலை காணப்பட்டது.

இதனால் முதலில் பா.ஜனதா முந்துவதும், பிறகு காங்கிரஸ் முன்னிலை பெறுவதும் என இழுபறி ஏற்பட்டது. இந்த நிலை கடைசி சில ஆயிரம் ஓட்டுகளை எண்ணி முடிக்கும் வரை நீடித்தது. இதனால் ஓட்டுகள் மெதுவாகவே எண்ணப்பட்டன. முடிவுகளை அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. மேலும், ஆட்சி அமைக்கத் தேவையான 116 தொகுதிகள் இரு கட்சிகளுக்குமே கிடைக்கவில்லை. நேற்று அதிகாலையில்தான் 230 தொகுதிகளுக்கான முடிவுகளையும் தேர்தல் கமி‌ஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இறுதி நிலவரப்படி காங்கிரஸ் 114 தொகுதிகளில் வெற்றி கண்டது.

பா.ஜனதா 109, பகுஜன் சமாஜ் 2, சமாஜ்வாடி 1, சுயேச்சைகளுக்கு 4 இடங்களும் கிடைத்தன. இந்த தேர்தலில் பா.ஜனதாவை விட காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே கூடுதலாக வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து உள்ளது. அதேநேரம் இரு கட்சிகளும் வாங்கிய ஓட்டு சதவீதத்தை கணக்கில் கொண்டால் இதில் காங்கிரசை பா.ஜனதா பின்னுக்குத் தள்ளி உள்ளது.

அதிக ஓட்டு 

பதிவான மொத்த ஓட்டுகளில் காங்கிரஸ் 40.9 சதவீத ஓட்டுகளை (1 கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 153 ஓட்டுகள்) பெற்றது. அதேநேரம் பா.ஜனதாவுக்கு 41 சதவீத வாக்குகள் (1 கோடியே 56 லட்சத்து 42 ஆயிரத்து 980 ஓட்டுகள்) கிடைத்து உள்ளன. இது காங்கிரசை விட 0.10 சதவீதம் அதிகம் ஆகும். ஓட்டுகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் காங்கிரசை விட பா.ஜனதா 47,827 ஓட்டுகள் கூடுதலாக பெற்று உள்ளது. 

தோல்விக்கு பொறுப்பு

மத்திய பிரதேசத்தில் தேர்தல் தோல்விக்கு பா.ஜனதாவின் பதவி விலகும் முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பொறுப்பேற்று உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘மாநிலத்தில் பா.ஜனதா தோல்வி கண்டதற்கு முழுக்க முழுக்க நானே காரணம். கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். மக்களும் எங்கள் மீது அன்பு செலுத்தினர். அதிக ஓட்டுகளை பெற்றபோதிலும் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எங்களால் அடையமுடியவில்லை’’ என்றார்.
 
வேட்டுவைத்த நோட்டா
 
பா.ஜனதா உடனான கடும் போட்டியில் காங்கிரஸ் குறைந்த வாக்கு வித்தியாசத்திலே வெற்றியை தனதாக்கியது.  மாநிலத்தில் பா.ஜனதாவின் ஓட்டு காங்கிரசுக்கு செல்லவில்லை எனவும் பார்க்கப்படுகிறது. பா.ஜனதா காங்கிரசைவிட ஒரு சதவித வாக்கு அதிகமாக பெற்றிருந்த போதும் ஆட்சியை தக்கவைக்க முடியவில்லை. இந்நிலையில் 11 தொகுதிகளில் நோட்டா பா.ஜனதாவிற்கு எமனானது, இதனால் ஆட்சி அதிகாரம் போனதும் தெரியவந்துள்ளது. 

மாநிலத்தில் நோட்டாவிற்கு 1.4 சதவிதம் வாக்கு அதாவது 542295 வாக்குகள் சென்றுள்ளது.


தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக கவனிக்கையில், பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை நோட்டா தடுத்துள்ளது என தெரிகிறது. காங்கிரஸ் வெற்றிப்பெற்ற 11 தொகுதிகளில்  வெற்றி வாக்கு விகிதத்தைவிட நோட்டாவிற்கு அதிகமான வாக்குகள் சென்றுள்ளது. பையாரோ, தாமோக், கன்னூர், குவாலியர், ஜாபல்பூர், ஜோபாட், மந்தாதாத், நேபாநகர், ராஜ்நகர், ராய்பூர் மற்றும் சுவாரசா சட்டசபைத் தொகுதிகளில் வெற்றி மார்ஜினைவிட நோட்டாவிற்கு அதிகமான வாக்குகள் சென்றுள்ளது. 11 தொகுதிகளில் 7 தொகுதிகளில் வெற்றி மார்ஜின் ஆயிரத்திற்கும் குறைவானது. 11 தொகுதிகளில் நோட்டா காங்கிரசுக்கு உதவியுள்ளது. 




நோட்டாவை தவிர்த்து மாயாவதியின் செல்வாக்கு மற்றும் உயர் பிரிவினர் கோபமும் தேர்தலில் எதிரொலித்தது என பார்க்கப்படுகிறது. நோட்டாவினால் 4 மந்திரிகளும் தோல்வியை தழுவியுள்ளனர். 

Next Story