ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு


ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Dec 2018 12:50 PM GMT (Updated: 13 Dec 2018 12:50 PM GMT)

ரபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

புதுடெல்லி,

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 2001-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்தது. 2012-ம் ஆண்டு இதற்காக பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்தது. பிறகு அந்த ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு திடீரென ரத்து செய்து விட்டது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்டதும், பிரான்ஸ் நாட்டிடம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவது பற்றி மீண்டும் பேசப்பட்டது. 

இதைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டுடன் மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி புதிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது.இந்த புதிய ஒப்பந்தப்படி, “ரபேல் போர் விமானத்துக்கான 50 சதவீத உதிரிப்பாகங்களை இந்தியாவில் உள்ள நிறுவனத்திடம் இருந்து பிரான்சு கொள்முதல் செய்ய வேண்டும்” என்று இந்தியா நிபந்தனை விதித்திருந்தது. 

இந்த நிலையில் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகளும், ஊழலும் நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.   இதற்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்தார். மேலும் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்றும் மறுத்துவிட்டார்.

இதற்கிடையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக  விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில்,  கடந்த நவம்பர் 14 ஆம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ரபேல் விவகாரத்தில் விசாரணை வேண்டுமா ? இல்லையா? என்பது குறித்து நாளை தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்.

Next Story