தமிழக எம்.பி.க்கள் 2-வது நாளாக அமளி : மேகதாது அணை பிரச்சினையில் இரு அவைகளும் மீண்டும் முடக்கம்


தமிழக எம்.பி.க்கள் 2-வது நாளாக அமளி : மேகதாது அணை பிரச்சினையில் இரு அவைகளும் மீண்டும் முடக்கம்
x
தினத்தந்தி 13 Dec 2018 11:30 PM GMT (Updated: 13 Dec 2018 9:48 PM GMT)

மேகதாது அணை விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் 2-வது நாளாக அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் முடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க. போராட்டம்நடத்தியது.

புதுடெல்லி, 

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை தமிழக எம்.பி.க்கள் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை அலுவல்கள் முடங்கின. இது 2–வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

மாநிலங்களவை காலையில் தொடங்கியதும் 2001–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று மேகதாது அணை பிரச்சினையை எழுப்பினர்.

‘காவிரியில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும்’ என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்தியிருந்த அவர்கள், இது குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். இந்த பிரச்சினை குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அதற்கு, ‘காவிரி பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அனுமதி வழங்கப்படும்’ என பதிலளித்த வெங்கையா நாயுடு, நாடாளுமன்றத்தை பாதுகாக்க 9 பேர் உயிர் தியாகம் செய்த நினைவு தினமான இன்றாவது (நேற்று) சபையை நடத்த அனுமதியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் அவரது கோரிக்கையை உறுப்பினர்கள் காதில் வாங்கவில்லை. காவிரி பிரச்சினையை வலியுறுத்தி தொடர்ந்து கோ‌ஷங்களை எழுப்பியவாறு இருந்தனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக வெங்கையா நாயுடு அறிவித்தார்.

இதற்கிடையே மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மக்களவையும் பலமுறை முடங்கியது. காலையில் அவை கூடியதும் இந்த பிரச்சினையை எழுப்பிய அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதைப்போல ரபேல் மற்றும் அயோத்தி விவகாரங்களை முன்வைத்து முறையே காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சியினரும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேசம் உறுப்பினர்களும் மையப்பகுதியை முற்றுகையிட்டனர்.

குறிப்பாக தங்களின் கோரிக்கை அடங்கிய பேனர் ஒன்றை அங்கிருந்த ஒலிவாங்கியில் (மைக்) தெலுங்குதேசம் உறுப்பினர் வெங்கடேஸ்வரராவ் தொங்க விட்டார். இது சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக உறுப்பினர்களை கண்டித்த அவர், சபையை சுமார் 10 நிமிடம் ஒத்தி வைத்தார். பின்னர் மீண்டும் சபை தொடங்கிய போதும் இதே நிலைதான் நீடித்தது. எனவே 12 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் 12 மணிக்கு சபை மீண்டும் கூடிய போதும், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சியினரின் அமளி தொடர்ந்தது. இதற்கு மத்தியிலும் பேசிய சிவசேனா உறுப்பினர் ஆனந்த்ராவ் அத்சுல், ராமர் கோவில் கட்டுவதற்கு தனி மசோதா கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். பா.ஜனதா பெரும்பான்மை பெற்றிருந்தும், இந்துத்துவாவை மறந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

அப்போது சபையில் கூச்சல், குழப்பம் அதிகரித்தது. உறுப்பினர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு சபாநாயகர் விடுத்த வேண்டுகோளை யாரும் ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர் சபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார். முன்னதாக நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மக்களவையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் சிலர், மேகதாது விவகாரத்தை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து திண்டுக்கல் தொகுதி எம்.பி. உதயகுமார் கூறுகையில், ‘பெங்களூரு நகர குடிநீர் தேவைக்காக மேகதாது அணை கட்டப்படுவதாக பொய்யான காரணம் சொல்கிறார்கள். ஏற்கனவே குடிநீருக்காக கர்நாடத்துக்கு தண்ணீர் ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு வரும் தண்ணீரில் 90 டி.எம்.சி. தண்ணீர் குறைந்துவிடும். தமிழகம் பாலைவனமாகும் சூழ்நிலை ஏற்படும்’ என்று குற்றம் சாட்டினார்.


Next Story