ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அனில் அம்பானி வரவேற்பு


ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அனில் அம்பானி வரவேற்பு
x
தினத்தந்தி 14 Dec 2018 7:37 AM GMT (Updated: 14 Dec 2018 8:27 AM GMT)

ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் அனில் அம்பானி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.  இதற்கு மத்தியில், ரபேல் பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பிறகு, வக்கீல் வினீத் தண்டா என்பவரும் அதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங்கும் வழக்கு தொடர்ந்தார். பின்னர், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த மாதம் 14-ந்தேதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளித்தது. அதில் “ ரபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் நீதிமன்றத்துக்கு இல்லை. ரபேல் போர்விமான கொள்முதல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்த எந்த முகாந்திரமும் இல்லை.  போர் விமானங்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து விசாரிப்பது நீதிமன்றத்தின் பணி அல்ல.

ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, ரபேல் போர்விமானங்கள் கொள்முதலில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை, விசாரணை கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்கிறோம்” என உத்தரவிட்டது. 

அனில் அம்பானி வரவேற்பு

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ரிலையன்ஸ் தலைவர் அனில் அம்பானி, தன் நிறுவனம் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு அரசியல் நோக்கத்துடன், தவறாக கூறப்பட்டது என்பதை தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத்துறையில், மேக் இன் இந்தியா மற்றும் திறன் இந்தியா ஆகிய அரசின் கொள்கைகளில் எங்களின் எளிய பங்களிப்பை செய்வதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளர்.

Next Story