ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மீண்டும் முதல்வராகிறார் -தகவல்கள்


ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மீண்டும் முதல்வராகிறார் -தகவல்கள்
x
தினத்தந்தி 14 Dec 2018 10:33 AM GMT (Updated: 14 Dec 2018 10:33 AM GMT)

ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மீண்டும் முதல்வராகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

ராஜஸ்தானில் முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்,  மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகிய இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

முதல்வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்வு செய்ய எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 2013 தேர்தலின்போது அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையிலான பிளவே காங்கிரஸ் ஆட்சியை இழக்க நேரிட்டது என கூறப்பட்டது. குஜராத் மாநிலத்தில் காங்கிரஸின் செயல்பாடு அதிகரிக்கவும், கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தவும் முக்கிய பணிகளை அசோக் கெலாட் மேற்கொண்டார். கட்சியின் தலைமை வழங்கிய பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இதற்கிடையே ராஜஸ்தானில் காங்கிரஸை பலப்படுத்தும் பணியில் சச்சின் பைலட் தீவிரம் காட்டினார். இதற்காக இடைவிடாது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணமும் மேற்கொண்டார். அவருடைய பணி வெற்றியில் முக்கிய இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இருவரில் யாரை தேர்வு செய்வது என்பதில் கட்சி தலைமைக்கு பெரும் சவால்தான். இதற்கிடையே சச்சின் பைலட்டை முதல்வராகிவிட்டு, அசோக் கெலாட்டை கட்சியை மேலும் பலப்படுத்த  பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துக்களும் எழுகிறது. 

இருவரும் போட்டியில் ஸ்திரமாக இருக்கும் நிலையில் தொண்டர்களின் நிலைப்பாட்டையும் காங்கிரஸ் கேட்டு வருகிறது.  இதற்கிடையே சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக அவருடைய தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று இரண்டாவது நாளாக சாலை மறியல் மற்றும் டயர்கள் தீ வைத்து எரிப்பு போன்ற சம்பவங்கள் அங்கு நடந்துள்ளது. சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட்டிடம் இன்று தலைமை பேச்சுவார்த்தை நடத்துகிறது.

முதல்வர் சீட் விவகாரத்தில் சச்சின் பைலட் இம்முறை ஸ்திரமாக இருப்பதாக தெரிகிறது. 

இந்நிலையில் ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மீண்டும் முதல்வராகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

Next Story