ரபேல் விவகாரம்: ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடுங்கள் பார்க்கலாம் மோடி, அரசுக்கு காங்கிரஸ் சவால்


ரபேல் விவகாரம்: ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடுங்கள் பார்க்கலாம் மோடி, அரசுக்கு காங்கிரஸ் சவால்
x
தினத்தந்தி 14 Dec 2018 12:14 PM GMT (Updated: 14 Dec 2018 12:14 PM GMT)

ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடுங்கள் பார்க்கலாம் என பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.

புதுடெல்லி,

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற மனுக்களை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, ரபேல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடும் இருப்பதாகத் தெரியவில்லை என்றது. இவ்விவகாரத்தில் மக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்தியது என பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இதற்கான தளம் கிடையாது, பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையைதான் கேட்டோம் என காங்கிரஸ் கூறியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே பாராளுமன்றத்தில் கடும் மோதல் நடைபெற்றது.  ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியது. ‘ராகுல் காந்தி ஒரு பொய்யர்’ என்று பா.ஜனதா எம்.பி.க்களும், ‘நாட்டின் காவல்காரர் ஒரு திருடர்’ என்று காங்கிரஸ் எம்.பி.க்களும் கோஷமிட்டனர். இதனால் அவையை ஒத்திவைக்க நேரிட்டது. 

ஜேபிசி விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

இதற்கிடையே ரபேல் விவகாரத்தில் ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடுங்கள் பார்க்கலாம் என பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா பேசுகையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தால் பல்வேறு அடுக்குகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதில் அனைத்து அம்சங்கள் குறித்தும் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க முடியாது என்று எங்களுக்கு தெரியும், இதனை ஏற்கனவே நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம். காங்கிரஸ் இவ்வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லவில்லை. ரபேல் விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த இயலுமா? என்று பிரதமர் மோடி, மத்திய அரசுக்கு சவால் விடுக்கிறேன்.

நீங்கள் அஞ்சவில்லை என்றால் ஏன் கூட்டுக்குழு விசாரணை நடத்தக் கூடாது? விமானங்களின் விலை ரூ.526 கோடியில் இருந்து எவ்வாறு ரூ.1670 கோடியாக உயர்ந்தது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். 

இந்த ஒப்பந்தம் தொடர்பான அரைகுறையான உண்மைகள் மட்டுமே சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது யாராலும் ஆய்வு செய்யப்படவிலலை என்று கூறியுள்ளார். 

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை என்பது எங்களுடைய  வரம்புக்கு அப்பாற்பட்டது என்று கோர்ட்டு கூறியுள்ளது என காங்கிரஸ் கூறியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு கூறியதை தவறாக வழிநடத்தாமல், தீர்ப்பை முழுமையாக தெரியப்படுத்த வேண்டியது மீடியாக்களின் பொறுப்பு எனவும் காங்கிரஸ் கூறியுள்ளது. தவறான தகவல்களை பரப்புவதற்கு முன்னதாக மீடியாக்களும், பா.ஜனதாவும் தீர்ப்பை முழுமையாக படிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.  முறைகேடு இல்லையென்று சான்றிதழ் வழங்குவதற்கு இது ஒன்றும் குற்றவியல் மனு கிடையாது என கூறியுள்ள காங்கிரஸ், ரபேல் ஊழல் தொடர்பான முக்கிய கேள்விகள் பதிலில்லாமல் தொடர்கிறது. விமானத்தின் விலை 300 சதவீதம் உயர்ந்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது காங்கிரஸ்.

Next Story