ரபேல் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிராகரித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு


ரபேல் விவகாரம்:  சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிராகரித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Dec 2018 2:32 PM GMT (Updated: 14 Dec 2018 2:32 PM GMT)

ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிராகரித்த ராகுல் காந்தி பிரதமர் மோடி மீதான குற்றச்சாட்டை நீட்டித்துள்ளார்.


புதுடெல்லி,

ரபேல் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முடக்கிய நிலையில், இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.  ரபேல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடும் இருப்பதாக தெரியவில்லை என்றது. 

இவ்விவகாரத்தில் மக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்தியது என பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இதற்கான தளம் கிடையாது, பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையைதான் கேட்கிறோம் என காங்கிரஸ் ஸ்திரமாக உள்ளது. மத்திய அமைச்சர்கள், பா.ஜனதா தலைவர்கள் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தி இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார். 

ராகுல் காந்தி பேசுகையில், 

ரபேல் போர் விமானத்தின் விலை விபரம் சிஏஜியிடம்  (மத்திய தணிக்கை குழு) தெரிவிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பேசவில்லை. நிர்மலா சீதாராமன், அருண் ஜெட்லியே பேசியுள்ளனர். பிரதமர் மோடி தன்னுடைய அலுவலகத்தில் பொது கணக்கு குழுவை வைத்திருக்கலாம், நமக்கு அது தெரியாது. பொது கணக்குகுழுவில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே உள்ளார். குழுவிற்கு விலை தொடர்பாக அறிக்கை வழங்கப்படவில்லை. அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என தெரிவிக்கவில்லை. 

அனைத்து அரசு நிறுவனங்களையும் பா.ஜனதா அரசு சீர்குலைத்து வருகிறது. பிரதமர் மோடியை போன்று இல்லாமல் நாங்கள் தொடர்ச்சியாக மீடியாக்களிடம் பேசுகிறோம். மீடியாக்கள் முன்னதாக உண்மையை தெரிவிப்பதில் அவருக்கு பயம் இருக்கலாம். ரூ. 526 கோடி விமானம் ரூ. 1600 கோடிக்கு வாங்குவது ஏன்? கட்டமைப்பு பணி எச்ஏஎல்-லிடம் இருந்து அம்பானிக்கு வழங்கப்பட்டது. அரசு நிறுவனமான எச்ஏஎல்லிற்கு அனுபவம் உள்ளது, கட்டமைப்பு வசதியை கொண்டுள்ளது. பொது கணக்கு குழுவிடம் எந்தஒரு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. விலை விபரம் மத்திய தணிக்கை குழு மற்றும் பொது கணக்கு குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுசுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. பொது கணக்கு குழுவின் சேர்மன் மல்லிகார்ஜுன கார்கே இங்கேதான் உள்ளார். அவரிடம் அதுபோன்ற அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. 

பிரதமர் மோடி அம்பானியின் நண்பர் என்பதை நிரூபிப்போம். இவ்விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை ஒருநாள் நடத்துவோம்.  ‘காவல்காரர் ஒரு திருடர்’ என்பதை நிரூபிப்போம். தவறான தகவல்கள் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அமைந்துள்ளது.  அதனை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. சிஏஜி அறிக்கை எங்குள்ளது என்பது தொடர்பாக பதிலளித்துதான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார். 


Next Story