ராஜஸ்தான் முதல்-மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு - திங்கட்கிழமை பதவி ஏற்கிறார்


ராஜஸ்தான் முதல்-மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு - திங்கட்கிழமை பதவி ஏற்கிறார்
x
தினத்தந்தி 14 Dec 2018 11:13 PM GMT (Updated: 14 Dec 2018 11:13 PM GMT)

ராஜஸ்தான் முதல்-மந்திரியாக அசோக் கெலாட்டும், துணை முதல்-மந்திரியாக சச்சின் பைலட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வருகிற திங்கட்கிழமை பதவி ஏற்கிறார்கள்.

ஜெய்ப்பூர்,

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல்களில் தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்றது. சத்தீஷ்காரில் அமோக வெற்றி பெற்று பாரதீய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிய காங்கிரசுக்கு மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதிலும் தனிப்பட்ட முறையில் அதிக இடங்கள் கிடைத்தன.

மத்தியபிரதேசத்தில் சமாஜ்வாடி மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முடிவு செய்தது. அங்கு மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் நேற்று முன்தினம் முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

ராஜஸ்தானில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 100 இடங்கள் தேவை என்ற நிலையில், 99 இடங்களை பெற்ற காங்கிரஸ், கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய லோக்தளம் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அங்கு மாநில முதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவதில் முன்னாள் முதல்- மந்திரியும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் அசோக் கெலாட்-மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

இது தொடர்பாக அவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனித்தனியாக அழைத்து பேசினார். சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். என்றாலும் புதிய முதல்- மந்திரியை சுமுகமாக தேர்ந்து எடுப்பதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்தது.

இதற்கிடையே சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக ராஜஸ்தானில் பல இடங்களில் அவரது ஆதவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில், அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரையும் ராகுல் காந்தி நேற்று மீண்டும் டெல்லியில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். நீண்ட நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பின், ராஜஸ்தான் முதல்-மந்திரியாக அசோக் கெலாட்டும், துணை முதல்-மந்திரியாக சச்சின் பைலட்டும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

இந்த தகவலை பின்னர், ராஜஸ்தான் மாநிலத்துக்கான காங்கிரஸ் பார்வையாளரும், பொதுச்செயலாளருமான கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அப்போது உடன் இருந்த அசோக் கெலாட் கூறுகையில், 3-வது முறையாக ராஜஸ்தான் முதல்-மந்திரியாக பணியாற்ற தனக்கு வாய்ப்பு அளித்ததற்காக ராகுல்காந்திக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தானும், சச்சின் பைலட்டும் இணைந்து சிறந்த ஆட்சியை வழங்கப்போவதாகவும் தெரிவித்தார்.

சச்சின் பைலட் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றார்.

பின்னர் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் திரும்பினார்கள். அங்கு நடைபெற்ற காங்கிரஸ் எம்.எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முறைப்படி சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைவராக (முதல்-மந்திரி) அசோக் கெலாட் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அதன்பிறகு அவர், சச்சின் பைலட் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் கல்யாண் சிங்கை சந்தித்து ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரினார். இதைத்தொடர்ந்து புதிய அரசு அமைக்க அவருக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

அதை ஏற்று ராஜஸ்தானின் புதிய முதல்-மந்திரியாக அசோக் கெலாட்டும், துணை முதல்-மந்திரியாக சச்சின் பைலட்டும் மற்றும் மந்திரிகளும் வருகிற 17-ந் தேதி (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார்கள். பதவி ஏற்பு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.

ராஜஸ்தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கும் 67 வயதான அசோக் கெலாட், ஏற்கனவே 1998-ம் ஆண்டும், அதன்பிறகு 2-வது முறையாக 2008-ம் ஆண்டும் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி ஆனார். 1999-ம் ஆண்டு முதல் சர்தார்புரா தொகுதியில் இருந்து தொடர்ந்து 5 தடவை ராஜஸ்தான் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய மந்தியாகவும் பதவி வகித்து இருக்கிறார். சட்டம் படித்து உள்ளார்.

இவருக்கு சுனிதா கெலாட் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Next Story