ரபேல் போர் விமான பேரம் குறித்த தணிக்கை அறிக்கையை பொது கணக்கு குழுவிடம் அளிக்காதது ஏன்? ராகுல் காந்தி கேள்வி


ரபேல் போர் விமான பேரம் குறித்த தணிக்கை அறிக்கையை பொது கணக்கு குழுவிடம் அளிக்காதது ஏன்? ராகுல் காந்தி கேள்வி
x
தினத்தந்தி 14 Dec 2018 11:23 PM GMT (Updated: 14 Dec 2018 11:23 PM GMT)

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில், ரபேல் போர் விமான பேரம் குறித்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை, பொது கணக்கு குழுவிடம் அளிக்கப்பட்டதாக கூறியுள்ளது. ஆனால், உண்மையில், அந்த அறிக்கை, மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான பொது கணக்கு குழுவிடம் அளிக்கப்படவே இல்லை. அந்த அறிக்கை எங்கே போனது? ஒருவேளை, வேறு ஏதேனும் பொது கணக்கு குழுவை பிரதமர் மோடி அமைத்துள்ளாரா?

எங்களின் அடிப்படை கோரிக்கை, இந்த ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான். கூட்டுக்குழு விசாரணை நடத்தினால், பிரதமர் மோடி, அனில் அம்பானி ஆகியோரின் பெயர் அம்பலத்துக்கு வரும். மோடி அரசு, எல்லா அமைப்புகளையும் சீரழித்து வருகிறது. அதன் மேற்பார்வையில், ரபேல் பேரத்தில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. ரூ.526 கோடியாக இருந்த விமானத்தின் விலை, ரூ.1,600 கோடியாக உயர்ந்தது ஏன் என்பதுதான் எங்களது அடிப்படை கேள்வி.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story