ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - அமித்ஷா பேட்டி


ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - அமித்ஷா பேட்டி
x
தினத்தந்தி 14 Dec 2018 11:26 PM GMT (Updated: 14 Dec 2018 11:26 PM GMT)

ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார்.

புதுடெல்லி,

ரபேல் போர் விமானம் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியதும் பா.ஜனதா தலைவர் அமித்ஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இதில் உண்மை வெற்றி பெற்றுள்ளது. பொய்கள் மூலம் மக்களை திசைதிருப்ப முயற்சித்த ராகுல் காந்தி நாட்டு மக்களிடமும், ராணுவத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இதன்மூலம் அவர் தேச பாதுகாப்புக்கு ஆபத்தை உருவாக்கிவிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என்று விமர்சித்த ராகுல் காந்தி இனியாவது பிரதமருக்கு எதிரான போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். அனைத்து திருடர்களும் ஒன்றுசேர்ந்து பிரதமரை திருடன் என்றார்கள். ஆனால் நாடு இதனை நம்பவில்லை.

எந்த அடிப்படையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பொய் குற்றச்சாட்டுகளை கூறினார் என்பதற்கான ஆதாரங்களை அவர் தனது நம்பகத்தன்மைக்காக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

இதுதொடர்பாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மூலம் ராகுல் காந்தி இதுதொடர்பாக கூறிய குற்றச்சாட்டில் உள்ள புள்ளிவிவரங்கள் அனைத்தும் பொய் என தெரியவந்துள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

உலக தலைவர்கள் தங்களது கருத்துகள் பொய் என தெரியவந்ததும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வது தான் ஜனநாயக பாரம்பரியத்தில் வழக்கமாக இருந்துள்ளது. ரபேல் ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பை மட்டுமின்றி பொருளாதாரத்தையும் பாதுகாத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கை பற்றி அவரிடம் கேட்டபோது, “கடந்த காலங்களிலும் இதுபோன்ற விசாரணையை நீதித்துறை தான் நடத்தியுள்ளது” என்றார்.

அப்போது அருகில் இருந்த ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மூலம் ரபேல் ஒப்பந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது” என்றார்.

இதேபோல மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் காங்கிரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story