ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ‘திடீர்’ மனு ‘தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும்’


ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ‘திடீர்’ மனு ‘தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும்’
x
தினத்தந்தி 16 Dec 2018 12:00 AM GMT (Updated: 15 Dec 2018 10:46 PM GMT)

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பின் குறிப்பிட்ட பத்தியில், திருத்தம் செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திடீரென மனு தாக்கல் செய்தது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்துவிட்டது. முறைகேடு நடந்ததற்கு ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி விட்டது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மூத்த வக்கீலுமான கபில் சிபலும், மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேயும் டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது கபில் சிபல் கூறுகையில், “ரபேல் போர் விமான விலை நிர்ணய விவரங்களை நாடாளுமன்றத்துக்கு கூறவில்லை. ஆனால் தலைமை கணக்கு தணிக்கையரிடம் தெரிவிக்கப்பட்டது என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆவணம் காட்டுகிறது என சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தலைமை கணக்கு தணிக்கையரின் அறிக்கையை நாடாளுமன்ற பொது கணக்கு குழு ஆய்வு செய்துள்ளது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அப்படி எந்த ஒரு அறிக்கையும் எனக்கு வரவில்லை என்று நாடாளுமன்ற பொது கணக்கு குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகிறார். அப்படியென்றால், இதற்கு யார் பொறுப்பு? யார் இதை சொன்னது? மத்திய அரசுதான் இதை கூறி இருக்கிறது. எப்படி அட்டார்னி ஜெனரல், அந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். கபில் சிபில் சுட்டிக்காட்டியுள்ள அம்சம், தீர்ப்பின் 25-வது பத்தியில் இடம் பெற்றுள்ளது.

இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தவறான தகவலை தெரிவித்துள்ளது என்று கூறி காங்கிரஸ் கட்சி பிரச்சினை எழுப்பி உள்ளது.

இந்த நிலையில், தீர்ப்பில் குறிப்பிட்ட பத்தியில் திருத்தம் செய்ய வேண்டி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு நேற்று திடீரென ஒரு மனு தாக்கல் செய்தது.

இதுபற்றி மத்திய சட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, “தலைமை கணக்கு தணிக்கையர் மற்றும் பொது கணக்கு குழு தொடர்பாக மத்திய அரசு மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்த ஆவணம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதை தெரிவிக்கவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

Next Story