சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு


சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 16 Dec 2018 10:16 AM GMT (Updated: 16 Dec 2018 10:16 AM GMT)

சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது.  இதை தொடர்ந்து அனைத்து வயது பெண்களையும் கேரள மாநில அரசு அனுமதித்துள்ளது. இதைக்கண்டித்து பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.  கோவிலுக்கு செல்ல முயற்சி செய்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.   

போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரவும், சபரிமலைக்கு பக்தர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் வந்து செல்லவும் கேரள போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அந்த வகையில் சபரிமலை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இந்த தடை உத்தரவை கொஞ்சம் கொஞ்சமாக நீட்டித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்தை  சேர்ந்த திருநங்கைகள் அனன்யா, திருப்தி, அவந்திகா, ரஞ்சுமோல்  சபரிமலைக்கு இருமுடிகட்டி அய்யப்பனை தரிசிக்க சென்றனர். எரிமேலி வழியாக பம்பைக்கு  செல்ல முயன்ற அவர்களை  தடுத்து நிறுத்தி போலீஸ் விசாரணை நடத்தியது.  விசாரணையின் போது,  முறைப்படி விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை  கோவிலுக்கு வந்துள்ளோம் என்று திருநங்கைகள் போலீஸாரிடம் தெரிவித்தனர். திருநங்கைகளை கோவிலுக்கு அனுமதித்தால் போராட்டம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்று போலீஸ் கருதியுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  

திருநங்கைகள் நீதிமன்ற உத்தரவை கூறி கேள்வி எழுப்பிய போது, சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் எனக் கூறி அவர்களை எரிமேலிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எருமேலியில் போலீஸாருடன் திருநங்கைகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பெண் போலீஸார் சமாதானப்படுத்தி அவர்களை பாதுகாப்புடன் கோட்டயம் அனுப்பி வைத்துள்ளனர். இவ்விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இதுதொடர்பாக அனன்யா பேசுகையில், பெண்கள் அனுமதி தொடர்பாக நான் பேசவரவில்லை. நான் பேசுவது எல்லாம் திருநங்கைகளுக்கான அனுமதி தொடர்பாகதான். நாங்கள் கோவிலுக்குள் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறுகிறார்கள். 

இதுதொடர்பாக பத்தினம்திட்டா ஆட்சியரிடம் முறையிட்டு  பாதுகாப்புடன் கோவிலுக்கு அனுப்ப கோரிக்கை விடுப்போம். நாங்கள்  முறைப்படி விரதம் இருந்து, இருமுடியுடன் சபரிமலைக்கு வந்தோம். ஆனால் போலீஸார் எங்களை தகாத முறையில் பேசி பம்பைக்கு செல்ல அனுமதி மறுத்தனர் என்று கூறியுள்ளார். 

பெண் உடையில் இருப்பதால் கோவிலுக்கு அனுமதிக்க முடியாது என்றனர். அதன்பின் ஆண்கள் உடையில் அணிந்தபின்பு வாருங்கள் என்றனர். பின்னர் நாங்கள் ஆண்களா? பெண்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். இல்லை திருநங்கைகள் என்று கூறினோம். பின்னர் எங்களை அழைத்துவந்த டிரைவரையும் கடுமையாக திட்டினர் என திருநங்கைகள் கூறியுள்ளனர்.  
 இதுதொடர்பாக திருநங்கைகள் வேதனையுடன் பேசியை வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.


Next Story