பா.ஜனதாவின் ரத யாத்திரைக்கு மேற்கு வங்காள அரசு அனுமதி மறுப்பு


பா.ஜனதாவின் ரத யாத்திரைக்கு மேற்கு வங்காள அரசு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 16 Dec 2018 2:52 PM GMT (Updated: 16 Dec 2018 2:52 PM GMT)

மதரீதியிலான வன்முறைக்கு வாய்ப்புள்ளது என்ற உளவுத்துறையின் அறிக்கையை சுட்டிக்காட்டி பா.ஜனதாவின் யாத்திரைக்கு மேற்கு வங்காள அரசு அனுமதி மறுத்துள்ளது.


கொல்கத்தா,


2019 தேர்தலை குறிவைத்து  மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளையும் தொடர்பு கொள்ளும் வகையில்  ரத யாத்திரை நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. 158 பொதுக்கூட்டங்கள், மூன்று பிரிவுகளாக ரத யாத்திரையை தொடங்கவும், 34 நாட்கள் தொடர்ந்து யாத்திரை நடத்தவும் முடிவு செய்துள்ளது. இதற்கான முதல் கூட்டத்தை 'ஜனநாயகத்தை காப்போம் பேரணி என்ற பெயரில் கூச் பெஹர் மாவட்டத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி அமித் ஷா பிரச்சாரத்தை தொடங்கிவைத்தார்.  மூன்று யாத்திரைகளை தொடங்கி வைக்க அமித்ஷா திட்டமிட்டிருந்தார். 
 
பா.ஜனதாவின் ரத யாத்திரைக்கு  மம்தா பானர்ஜி அரசு அனுமதியை மறுத்துவிட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்றம் சென்றது விவகாரம். அங்கு பா.ஜனதாவிற்கு கதவு திறக்கப்படவில்லை. மாறாக பேச்சுவார்த்தையை நடத்துமாறு மேற்கு வங்க அரசிடம் ஐகோர்ட்டு கேட்டது. இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர், பா.ஜனதாவிற்கு வழங்கிய கடிதத்தில் யாத்திரைக்கு அனுமதியளிக்க முடியாது என்று அரசு தெரிவித்துவிட்டது.  பா.ஜனதாவின் ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் ரத யாத்திரை நடக்கும் இடங்களில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆதலால், ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது, எனவே அனுமதி கிடையாது என மாநில அரசு தெரிவித்துள்ளது.
 
 “பா.ஜனதா  நடத்தும் ரத யாத்திரையில், ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள், விஎச்பி  உள்ளிட்ட அமைப்பினரும் பங்கேற்பார்கள். இவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதால், ரதயாத்திரை நடக்கும் இடங்களில் பொதுமக்களின் அமைதிக்குக் குந்தகம் விளையும் என்று உளவுத்துறை எச்சரித்து மாநில அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. ஆதலால், அனுமதி அளிக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ் கட்சி தலைவர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டார்.  

இந்நிலையில் மேற்கு வங்க அரசு அனுமதி அளிக்க மறுப்பது ஜனநாயக விரோதமாகும். இந்த முடிவை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என பா.ஜனதா தெரிவித்துள்ளது.


Next Story