ரபேல் விவகாரம்: ‘நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது’ - அருண் ஜெட்லி திட்டவட்டம்


ரபேல் விவகாரம்: ‘நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது’ - அருண் ஜெட்லி திட்டவட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2018 10:45 PM GMT (Updated: 16 Dec 2018 7:58 PM GMT)

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது என நிதி மந்திரி அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்தார்.

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது.

எனினும் இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அவர்கள் போராடி வருவதால் இரு அவைகளும் முடங்கி வருகிறது.

ஆனால் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது என நிதி மந்திரி அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ‘டுவிட்டர்’ தளத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

ரபேல் ஒப்பந்தத்தை போபர்ஸ் ஒப்பந்தத்துடன் ஒழுக்கக்கேடாக ஒப்பிடும் முயற்சியில் ராகுல் காந்தி ஈடுபட்டு உள்ளார். ஆனால் ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர் இல்லை, லஞ்சம் இல்லை, ஒட்டாவியோ குவாத்ரோச்சி இல்லை.

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக கூறப்பட்ட அனைத்து வார்த்தைகளும் பொய் என நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக கூறப்பட்ட பொய்கள் அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதை சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி இருக்கிறது.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணையை நீதித்துறை நடத்தி இருக்கிறது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அது சட்டப்பூர்வமாகி விட்டது. கோர்ட்டு தீர்ப்புதான் இறுதியானது. இதை கோர்ட்டு மட்டுமின்றி வேறு யாராலும் மறு ஆய்வு செய்ய முடியாது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மாறாக, ஒரு அரசியல் அமைப்பு (நாடாளுமன்ற கூட்டுக்குழு) எதையும் ஒருபோதும் கண்டு பிடிக்க முடியாது. எனவே ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது. இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


Next Story