அஸ்ஸலாம் அலைக்கும் என கூறாத மாணவர்களுக்கு அடி; பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்


அஸ்ஸலாம் அலைக்கும் என கூறாத மாணவர்களுக்கு அடி; பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 17 Dec 2018 3:34 PM GMT (Updated: 17 Dec 2018 3:34 PM GMT)

அஸ்ஸலாம் அலைக்கும் என கூறாத மாணவர்களை அடித்த பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

ஷாஜகான்பூர்,

உத்தர பிரதேசத்தில் திகார் பகுதியில் பில்ஹாரி மேனிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.  இங்கு மாவட்ட முதன்மை செயலரான டிம்பிள் வர்மா வருகை தந்துள்ளார்.  அவரிடம் பள்ளி முதல்வர் சந்த் மியான் மீது 4ம் வகுப்பு மாணவனான பிரியான்ஷு புகார் தெரிவித்துள்ளான்.

அதில், யாரும் குட் மார்னிங் என கூற கூடாது.  அப்படி கூறினால் அடிப்பேன் என்றும் அஸ்ஸலாம் அலைக்கும் என கூறி தன்னை வரவேற்க வேண்டும் என்றும் மியான் வற்புறுத்தினார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அஸ்ஸலாம் அலைக்கும் என்றால் அரபு மொழியில் உனக்குள் அமைதி இருக்கட்டும் என்று பொருள்.  இந்த வணக்கமுறை முஸ்லிம் மதத்தினரிடையே கூறப்படும்.

சில மாணவர்களால் அப்படி கூற முடியவில்லை.  இதனால் அவர்களுக்கு அடி விழுந்துள்ளது என கூறிய அந்த மாணவன் அவனது கழுத்தில் இருந்த காயம் பட்ட அடையாளத்தினையும் அதிகாரியிடம் காண்பித்துள்ளான்.

இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு மாணவன் அனுப்பப்பட்டு உள்ளான்.  முதற்கட்ட விசாரணை அறிக்கை முடிவில் மியான் குற்றவாளி என தெரிய வந்து அவரை பணியிடை நீக்கம் செய்து உள்ளோம் என அதிகாரி ராகேஷ் கூறியுள்ளார்.

இதேவேளையில், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மியான் சில சதி திட்டத்தினால் எனக்கு அவதூறு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

Next Story