அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அதிருப்தியாளர்கள் இல்லை - சசிகலாவை சந்தித்த பின் டி.டி.வி.தினகரன் பேட்டி


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அதிருப்தியாளர்கள் இல்லை - சசிகலாவை சந்தித்த பின் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 17 Dec 2018 10:15 PM GMT (Updated: 17 Dec 2018 8:08 PM GMT)

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அதிருப்தியாளர்கள் யாரும் இல்லை என்று நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின் பேட்டியளித்த டி.டி.வி.தினகரன் கூறினார்.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சசிகலாவை சந்திப்பதற்காக நேற்று டி.டி.வி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு வந்தார்.

மதியம் 12.45 மணிக்கு டி.டி.வி.தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 12 எம்.எல்.ஏ.க்கள், விருத்தாசலம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன் ஆகியோருடன் சிறைக்குள் சென்றார். இவர்களை தொடர்ந்து இளவரசியின் மகன் விவேக், மகள் ஷகிலா, மருமகன் ராஜராஜன், சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரர் பழனிவேல் ஆகியோரும் மதியம் 1.05 மணிக்கு சிறைக்குள் சென்றனர்.

இந்த சந்திப்பின்போது, டி.டி.வி.தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்பாடு, ஆதரவாளர்களின் நிலைப்பாடு, தமிழக அரசியல் நடவடிக்கை குறித்து சசிகலாவுடன் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகள் குறித்தும் அவர்கள் 2 பேரும் பேசி கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பின்னர், மதியம் 3.15 மணிக்கு டி.டி.வி.தினகரன் உள்பட அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர். சிறை வளாகத்தில், டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சசிகலாவை சந்தித்தது வழக்கமான ஒன்று தான். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்து இருப்பதால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிலர் விலகுவதன் மூலம் கட்சி அழிந்துவிடும் என்றால் உலகத்தில் யாரும் கட்சி நடத்த முடியாது. தளபதி ஒருவர் சென்றுவிட்டால் அடுத்த தளபதி தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வேறு கட்சிக்கு செல்வதாக கூறும் தகவலில் உண்மையில்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அதிருப்தியாளர்கள் யாரும் இல்லை. என் வளர்ச்சியை பார்த்து ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியும் பயப்படுகிறது.

அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவற்றை இணைப்பது தொடர்பாக எந்த அழுத்தமும் வரவில்லை. ஒருவேளை அழுத்தம் கொடுக்கப்பட்டால் அதையும் சந்திக்க தயாராக உள்ளோம். எந்த அழுத்தத்துக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அடிபணியாது. நாங்கள் அவர்களுடன் சென்று இணைய வேண்டும் என்பதில் அர்த்தம் கிடையாது. வேண்டுமானால் எங்கள் கட்சியில் அவர்கள் வந்து இணைந்து கொள்ளட்டும்.

கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் முன்மொழிந்து பேசியுள்ளார். இது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேகதாது விவகாரத்தில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் அமைதியாக இருந்து விடுவாரா?. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story