சென்னை-கன்னியாகுமரி இடையே ‘கடலோர பகுதி மேம்பாட்டுக்காக ரூ.45¼ கோடி விடுவிப்பு’ - மைத்ரேயன் எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்


சென்னை-கன்னியாகுமரி இடையே ‘கடலோர பகுதி மேம்பாட்டுக்காக ரூ.45¼ கோடி விடுவிப்பு’ - மைத்ரேயன் எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்
x
தினத்தந்தி 18 Dec 2018 10:00 PM GMT (Updated: 18 Dec 2018 7:36 PM GMT)

சென்னை-கன்னியாகுமரி இடையே கடலோர பகுதி மேம்பாட்டுக்காக ரூ.45¼ கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என மைத்ரேயன் எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில் அளித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் வா.மைத்ரேயன் எழுத்துப்பூர்வமாக கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதில், “தமிழ்நாட்டில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா? இந்திய சுற்றுலா நிதிக்கழகம் மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட கடன் எவ்வளவு? தமிழ்நாட்டில் சுற்றுலா மற்றும் புனித தலங்களின் மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கீடு செய்ய புதிய முயற்சிகள் உள்ளதா? என்று கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கே.ஜே.அல்போன்ஸ் அளித்த பதில் வருமாறு:-

சுற்றுலா அமைச்சகத்தின் ‘ஸ்வதேஷி தர்ஷன்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2016-17-ம் ஆண்டில் சென்னை-மாமல்லபுரம்-ராமேசுவரம்-மணப்பாடு-கன்னியாகுமரி ஆகிய கடலோர பகுதி மேம்பாட்டுக்காக ரூ.99.92 கோடி ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.45.24 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

புனித தலம், ஆன்மிக மரபு சார்ந்த பகுதிகள் மேம்பாட்டு திட்டம் (பரிஷத்) மூலமாக காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு 2016-17-ம் ஆண்டில் ரூ.16.48 கோடி அங்கீகரிக்கப்பட்டு, ரூ.8.24 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி மேம்பாட்டுக்காக இந்த திட்டத்தின் கீழ் 2016-17-ம் ஆண்டில் ரூ.5.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.2.59 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.


Next Story