மத்திய பிரதேசத்தை தொடர்ந்து நடவடிக்கை: சத்தீஷ்காரில் ரூ.6,100 கோடி விவசாய கடன் ரத்து


மத்திய பிரதேசத்தை தொடர்ந்து நடவடிக்கை: சத்தீஷ்காரில் ரூ.6,100 கோடி விவசாய கடன் ரத்து
x
தினத்தந்தி 18 Dec 2018 11:00 PM GMT (Updated: 18 Dec 2018 8:18 PM GMT)

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து சத்தீஷ்கார் மாநிலத்தில் ரூ.6,100 கோடி விவசாய கடனை ரத்து செய்து முதல்-மந்திரி பூகேஷ் பாகேல் உத்தரவிட்டார்.

ராய்ப்பூர்,

பாரதீய ஜனதா கட்சி வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து ராஜஸ்தான் முதல்-மந்திரியாக அசோக் கெலாட், மத்தியபிரதேச முதல்-மந்திரியாக கமல்நாத், சத்தீஷ்கார் முதல்-மந்திரியாக பூகேஷ் பாகேல் ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டனர்.

தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாக்குறுதி அளித்து இருந்தார். அதன்படி நேற்று முன்தினம் பதவி ஏற்ற மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத், ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன்களை ரத்து செய்தார்.

அதைத் தொடர்ந்து சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி பூகேஷ் பாகேலும், குறுகிய கால விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். பதவி ஏற்புக்கு பின்னர் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து பூகேஷ் பாகேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சத்தீஷ்கார் மாநில விவசாயிகள் வணிக வங்கிகள், கிராம வங்கிகளில் கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி வரை பெற்ற குறுகிய கால கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு மொத்தம் ரூ.6,100 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 16 லட்சத்து 65 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு பூகேஷ் பாகேல் தெரிவித்தார்.

இதேபோல் பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்திலும் ரூ.600 கோடி விவசாய கடன் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பெற்ற கடனில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.25 ஆயிரம்) தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


Next Story