விவசாய கடன்களை ரத்து செய்யும் வரை மோடியை தூங்க விடமாட்டோம் - ராகுல் காந்தி பேட்டி


விவசாய கடன்களை ரத்து செய்யும் வரை மோடியை தூங்க விடமாட்டோம் - ராகுல் காந்தி பேட்டி
x
தினத்தந்தி 18 Dec 2018 11:15 PM GMT (Updated: 18 Dec 2018 8:23 PM GMT)

அனைத்து விவசாயிகளின் கடன்களும் ரத்து செய்யப்படும் வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று உறுதி அளித்தோம். அதன்படி இப்போது மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 2 மாநிலங்களில் 6 மணி நேரத்துக்குள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். 3-வதாக ராஜஸ்தான் மாநிலத்திலும் மிக விரைவில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

அனைத்து விவசாயிகளின் கடன்களும் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியை தூங்க விடமாட்டோம். மோடியின் அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால், 2019-ல் எங்களை ஆட்சியில் அமர்த்தினால் நாங்கள் விவசாய கடன் களை தள்ளுபடி செய்வோம் என உறுதி அளிக்கிறேன்.

பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோரின் நண்பர்களின் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொழில் அதிபர் அனில் அம்பானி உள்பட 15 நபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏழை மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் ஒரு பக்கம், தொழில் அதிபர்கள் குழுவினர் மறுபக்கம்.

ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி உள்பட நாட்டில் உள்ள பெரிய தொழில் அதிபர்கள் 15 பேருக்கு கண்ணை மூடிக்கொண்டு கடன்கள் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த 4½ ஆண்டுகளாக விவசாயிகளின் இன்னல்களை போக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியும், அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்கள் பக்கம் நிற்கிறது.

பண மதிப்பு இழப்பு உலகின் மிகப்பெரிய ஊழல். இதன்மூலம் மத்திய அரசு பொதுமக்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகளின் பணத்தை திருடி தனது தொழில் நண்பர்களிடம் கொடுத்துவிட்டது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

ரபேல் விலை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தவறு இருப்பதாக அரசு கூறியிருப்பது பற்றி அவரிடம் கேட்டபோது, “இன்னும் பண மதிப்பு இழப்பு, விவசாய கடன் தள்ளுபடி போன்றவைகளில் நடைபெற்றுள்ள பல தவறுகள் இனி வெளிவரும்” என்றார்.

ரபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் மத்திய அரசும், பா.ஜனதாவும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதை தவிர்த்து ஓடுகிறது என்றும் அவர் கூறினார்.

சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது உள்பட சில கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

ராகுல் காந்தியின் பேட்டி குறித்து மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடியை தூங்க விடமாட்டோம் என்று கூறியிருப்பது ராகுல் காந்தியின் தரம்தாழ்ந்த பேச்சு. ரபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க நான் தயார். என்னுடன் காங்கிரசார் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? நீங்கள் இதில் இருந்து தப்பி ஓடாதீர்கள். ராணுவ ஒப்பந்தங்கள் தொடர்பான பல எலும்புக்கூடுகள் காங்கிரசின் அலமாரியில் உள்ளன.

கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அப்போது விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள்? இப்போது ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி என நாடகம் ஆடுகிறார்கள். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Next Story