பாகிஸ்தானுக்கு எதிராக பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்


பாகிஸ்தானுக்கு எதிராக பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2018 7:15 AM GMT (Updated: 19 Dec 2018 7:15 AM GMT)

நீலம் நதியில் நீர் மின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்றது.

முசாபராபாத், 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 13 ஆயிரத்து 300 சதுர கி.மீ. பகுதி “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்” பகுதியாக உள்ளது. தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதி சுயாட்சி மாநிலமாக இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) இணைந்து நீண்ட காலமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. 

இந்த நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஓடும் நீலம் - ஜீலம் ஆற்றில், நீர் மின் திட்டத்தை செயல்படுத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், இதற்கு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீர் மின் திட்டத்திற்கு எதிராக முசாபராபாத் நகரில் பெரும் போராட்டமும் நடைபெற்றது. 

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், இது போன்ற திட்டங்களை செயல்படுத்தக்கூடாது எனவும், மிகப்பெரிய அணை, நீர் மின் திட்டம் ஆகியவற்றை கட்டி இப்பகுதியில் உள்ள இயற்கை வளங்களை பாகிஸ்தான் அரசு சூறையாடுவதாக குற்றம் சாட்டினர்.  ஏற்கனவே, நீர் பற்றாக்குறை இருப்பதாகவும், நீலம் போன்ற நதியில் நீர் மின் திட்டத்தை செயல்படுத்துவதால், குடிநீர் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் எனவும் அப்பகுதி மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

Next Story