99 சதவீத பொருட்களை 18 சதவீத வரம்புக்குள் கொண்டுவர முயற்சி : விலை குறையும் பொருட்களின் பட்டியல்


99 சதவீத பொருட்களை 18 சதவீத வரம்புக்குள் கொண்டுவர முயற்சி : விலை குறையும் பொருட்களின் பட்டியல்
x
தினத்தந்தி 19 Dec 2018 11:17 AM GMT (Updated: 19 Dec 2018 11:17 AM GMT)

99 சதவீத பொருட்களை 18 சதவீத வரம்புக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் விலை குறையும் பொருட்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

மும்பை,

மும்பையில் ஆங்கில தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டபோது, அதில் பதிவு செய்யப்பட்ட 65 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே இருந்தது.  தற்போது கூடுதலாக 55 லட்சம் நிறுவனங்கள் இணைந்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மிக எளிதாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கமாகும். அதன்படி 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் உள்ள பல பொருட்களின் மீதான வரி விதிப்பு 18 சதவீதம் அல்லது அதற்கு கீழான பட்டியலுக்குள் கொண்டு வரப்படும். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என கூறினார்.

மத்திய அரசின் உத்தரவின் பேரில் வருகிற 22-ந் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அன்று 28 சதவீத வரி விதிப்பு பட்டியலில் இருக்கும் பொருட்களில் 25 முதல் 30 பொருட்களின் மீதான வரி 18 அல்லது அதற்கும் குறைவான சதவீத வரி விதிப்பு பட்டியலுக்குள் கொண்டு வரப்படும். அந்த 30 பொருட்கள் என்னென்ன என்பது 22-ந்தேதி தெரிய வரும்.

அனேகமாக சிமெண்ட், கிரானைட், மார்பிள், டயர்கள், ஏ.சி. எந்திரங்கள், டிஷ்வாசர், இரு சக்கர வாகனங்கள், டிஜிட்டல் கேமிராக்கள், டிஜிட்டல் ரிக்கார்டுகள், வீடியோ கேம்ஸ் கருவிகள், குளிர் பானங்கள், கார் உதிரிப் பாகங்கள் மீதான 28 சதவீத வரியில் சலுகைகள் அளிக்கப்பட்டு 18 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான வரி விதிப்பு பட்டியலுக்குள் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிச் சலுகையால் 30 பொருட்களின் விலை மளமளவென குறைய வாய்ப்பு உள்ளது.

இந்த நடவடிக்கைக்குப் பிறகு அதிகபட்ச 28 சதவீத வரி விதிப்பு பிரிவில் 5 அல்லது 7 பொருட்கள் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது புகையிலை சார்ந்த பொருட்கள், அதிநவீன சொகுசு கார்கள், விமானங்கள், வெளிநாட்டு மதுபான வகைகள், சுற்றுலா கப்பல்கள், துப்பாக்கிகள் போன்றவை மட்டுமே இனி 28 சதவீத வரி விதிப்பு பிரிவில் இருக்கும். ஜி.எஸ்.டி. வரி முறை அமல்படுத்தப்பட்ட போது 226 பொருட்கள் 28 சதவீத வரி விதிப்பு பிரிவில் இருந்தன. தற்போது சுமார் 200 பொருட்கள் மீதான வரி விதிப்பு முறை மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக 99 சதவீத பொருட்களின் விலை குறையும். சிமெண்ட் மீதான 28 சதவீத வரி விதிப்பை 18 சதவீதமாக மாற்றும் போது மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் 25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். என்றாலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த இழப்பை ஏற்க மத்திய அரசு முன் வந்துள்ளது.

28 சதவீத வரி விதிப்பில் செய்யப்படும் மாற்றம் நடுத்தர பிரிவு மக்களுக்கு உதவும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story