மேகதாது, ரபேல் விவகாரங்களால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம் - இரு அவைகளும் ஒத்திவைப்பு


மேகதாது, ரபேல் விவகாரங்களால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம் - இரு அவைகளும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 19 Dec 2018 11:15 PM GMT (Updated: 19 Dec 2018 9:05 PM GMT)

ரபேல் மற்றும் மேகதாது உள்ளிட்ட விவகாரங்களால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதால் இரு அவைகளும் நேற்றும் ஒத்திவைக்கப்பட்டன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இந்த தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி தினந்தோறும் அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதனால் இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருகின்றன. நேற்றும் இந்த நிலைமை தொடர்ந்தது.

மக்களவை காலையில் தொடங்கியதும், ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கக்கேட்டு காங்கிரசும், மேகதாது அணை பிரச்சினையை எழுப்பி அ.தி.மு.க.வும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்குதேசமும் அமளியை தொடங்கின. இந்த கட்சிகளை சேர்ந்த சுமார் 40 எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதியில் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

அப்போது, ‘மத்திய பிரதேசத்தில் வேலை வாய்ப்புகளை பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் அபகரித்துக்கொள்வதாக மத்திய பிரதேச மந்திரி கமல்நாத் கூறியிருப்பதாக’ பா.ஜனதா எம்.பி.க்கள் சபையில் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக அவர்களும் கோஷங்களை எழுப்பினர்.

இதனால் சபையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது. அவர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு யாரும் செவிசாய்க்காததால், சபையை நண்பகலுக்கு அவர் ஒத்திவைத்தார். பின்னர் சபை மீண்டும் கூடியபோதும் இதே நிலை நீடித்ததால் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் 2 மணிக்கு சபை கூடியபோது நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவை விவாதத்துக்கு எடுக்க சபாநாயகர் முயன்றார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டவாறே இருந்தனர். இதனால் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை சபாநாயகர் கண்டித்தார்.

‘எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க முடியாது என நான் சொல்லவில்லை. வெறும் கோஷங்களை எழுப்புவதால் மட்டும் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது. தொடர்ந்து கோஷங்கள் எழுப்புவது, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண உறுப்பினர்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது’ என கடிந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர் சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

இதற்கிடையே மாநிலங்களவையிலும் மேகதாது பிரச்சினை மற்றும் ரபேல் விவகாரங்களை முன்வைத்து அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதியில் சென்று அமளியில் ஈடுபட்டனர். இதற்கு போட்டியாக ஆளுங்கட்சி எம்.பி.க்களும் காங்கிரசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ரபேல் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக்கி இருப்பதால் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இவ்வாறு இரு தரப்பினரும் கோஷங்களை எழுப்பியவாறு இருந்ததால் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கடும் அதிருப்தி அடைந்தார். ‘சபையில் சுமுகமான விவாதம் நடைபெறுவதில் யாருக்கும் விருப்பம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த அமளியை நாட்டு மக்கள் யாரும் பார்க்க வேண்டாம்’ எனக்கூறி சபையை நாள் முழுவதும் அவர் ஒத்திவைத்தார்.

Next Story