அயோத்தியில் சரியான இடத்தில் ராமர் கோவிலை கட்ட விரும்புகிறோம் - அமித்ஷா


அயோத்தியில் சரியான இடத்தில் ராமர் கோவிலை கட்ட விரும்புகிறோம் - அமித்ஷா
x
தினத்தந்தி 20 Dec 2018 6:27 AM GMT (Updated: 20 Dec 2018 7:26 AM GMT)

அயோத்தியில் சரியான இடத்தில் ராமர் கோவில் கட்ட விரும்புகிறோம், சுப்ரீம் கோர்ட்டு தினசரி விசாரணை நடத்தினால் 10 நாட்களில் முடிந்து விடும் என அமித்ஷா கூறியுள்ளார்.

அயோத்தியில் ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்து இருந்த பிரச்சினைக்கு உரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்விக்கு இன்னும் இறுதி முடிவு ஏற்படவில்லை. இது குறித்த வழக்கை அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வு விசாரித்து, 2010–ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அதில், பிரச்சினைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் இதில் சம்மந்தப்பட்டவர்கள் உடன்படாமல், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்குகளை தாக்கல் செய்தனர். அவை 8 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளன. 

இந்த மேல் முறையீட்டு வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்தி போட்டுள்ளது. நீதிபதிகள் அமர்வு அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கலாமா அல்லது நாள்தோறும் விசாரணை நடத்தலாமா என்பது குறித்து 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் விசாரணையின் போது முடிவு செய்யப்படும். மேலும், சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்ற விசாரணையும் நடைபெறும் என்று கூறி அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 
இந்து அமைப்புகள் தீவிரம் 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்புகள் தீவிரமாக எடுத்துள்ளது.

ராமருக்கு கோவில் கட்டவேண்டும் என்று விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.  அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இந்த பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. சமீபத்தில் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி அங்கு 2 நாள் மாநாடு நடந்தது. ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

 இந்துத்துவா அமைப்புகளின் உணர்வுகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு உடன்பாடு இருந்தாலும்கூட, சட்டம் இயற்றும் முடிவுக்கு அந்த கட்சி வரவில்லை. இருப்பினும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்று பாரதீய ஜனதா கட்சிக்குள் கருத்து எழுந்துள்ளது.

பா.ஜனதா எம்.பி.க்கள் கேள்வி

இந்த நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், கட்சியின் தலைவர் அமித் ஷாவும் கலந்து கொள்ளவில்லை. இதில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ரவீந்திர குஷ்வாகா, ஹரி நாராயண் ராஜ்பார் ஆகியோர் அயோத்தி பிரச்சினையை எழுப்பி பேசினார்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது எப்போது என அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவர்களின் பேச்சுக்கு பிற எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங், “அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எல்லோரின் விருப்பமும் ஆகும். அதே நேரத்தில் உறுப்பினர்கள் பொறுமை காக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். 

அமித்ஷா பேச்சு 

இந்து அமைப்புகளின் வலியுறுத்தலுக்கு பா.ஜனதா எம்.பி.க்களும் ஆதரவுகரம் நீட்டியுள்ள நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா, அயோத்தியில் சரியான இடத்தில் கோவிலை கட்டவே நாங்கள் விரும்புகிறோம், இதுதொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தினசரி விசாரணை செய்தால், 10 நாட்களை தாண்டாது என கூறியுள்ளார். ஜனவரியில் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அமித்ஷா, என்ன முடிவாக இருந்தாலும் தெரியவந்து விடும். பா.ஜனதா மட்டும் கிடையாது இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார். 

மும்பையில் டிவி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அமித்ஷா,  அயோத்தி விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் 2014-ம் ஆண்டுக்கு முன்னதாகவே உள்ளது. மத்திய மற்றும் உத்தரபிரதேச மாநில வழக்கறிஞர்கள் விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி  தொடர்ந்து கோர்ட்டை கேட்டுக் கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். சபரிமலை விவகாரம் தொடர்பாக அமித்ஷா பேசுகையில், சபரிமலை விவகாரம் பாலின பாகுபாடு தொடர்பானது கிடையாது, இது நம்பிக்கை சார்ந்தது. நீதிமன்ற தீர்வு சாத்தியமாகாத விவகாரங்கள் பல உள்ளது, இதனை மக்களிடம் விட வேண்டும். என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை என்னவென்றால் மத இயல்பை நீதித்துறை மறுபரிசீலனை செய்ய முடியாது என்பதாகும் என தெரிவித்துள்ளார். 

Next Story