வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ரபேல் ஊழல் முக்கிய பிரச்சினையாக எதிரொலிக்கும் - ப.சிதம்பரம்


வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ரபேல் ஊழல்   முக்கிய  பிரச்சினையாக எதிரொலிக்கும் - ப.சிதம்பரம்
x

வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ரபேல் ஊழல் முக்கிய பிரச்சினையாக எதிரொலிக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

பெங்களூர், 

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யும் விவகாரத்தில் பிரதமர் மோடி சிலருக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரை நேரடியாக குற்றம்சாட்டி, நமது பிரதமர் நாட்டின் காவலாளி அல்ல. அவர் கொள்ளையடிப்பதில் வல்லவர் என பேசி வருகிறார்.

இவ்விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. ரபேல் கொள்முதல் விவகாரத்தில் உரிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டதாக மத்திய அரசு தாக்கல் செய்த விளக்கம் திருப்தியளிப்பதால் இது தொடர்பான விசாரணைக்கு அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தது.

இந்நிலையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள்  மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் , ‘எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ரபேல் போர் விமானம் பேர ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு இந்த அரசு உத்தரவிடாவிட்டால் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும் நாங்கள் அந்த காரியத்தை செய்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரபேல் ஊழலை முன்வைத்து நாங்கள் நடத்திய பிரசாரங்களால் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் இவ்விவகாரத்தால் பா.ஜ.க.வுக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்பித்தனர். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இது முக்கிய  பிரச்சனையாக எதிரொலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story