ஆம் ஆத்மியில் இருந்து விலகுமாறு அல்கா லம்பாவுக்கு நெருக்கடி


ஆம் ஆத்மியில் இருந்து விலகுமாறு அல்கா லம்பாவுக்கு நெருக்கடி
x
தினத்தந்தி 22 Dec 2018 2:55 AM GMT (Updated: 22 Dec 2018 6:18 AM GMT)

ஆம் ஆத்மியில் இருந்து விலகுமாறு அல்கா லம்பாவை அக்கட்சி கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுமாறு டெல்லி எம்.எல்.ஏ அல்கா லம்பாவை அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவர வழக்கை கட்டுப்படுத்த தவறியதால், ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் என்று டெல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பான சில மணி நேரங்களில், மேற்கூறியபடி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை எனக்கூறி ஆம் ஆத்மி மறுப்பு தெரிவித்தது. 

அல்கா லம்பா, ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் பிடிவாதமாக இருந்ததாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்த தீர்மானத்துக்கு நான் ஆதரவு அளிக்க மாட்டேன் எனக்கூறியதால், கட்சியினர் என் மீது கோபம் கொண்டதாக அல்கா லம்பா கூறி வருகிறார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அல்கா லம்பா அளித்த பேட்டியில், “ ராஜினாமா செய்யுமாறு கட்சி என்னை கேட்டுக்கொண்டுள்ளது. நான் ராஜினாமா செய்யத் தயாராகவே இருக்கிறேன். ராஜீவ் காந்தி நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். எனவே அவருக்கு எதிரான தீர்மானத்தை நான் ஆதரிக்கவில்லை. எனவே, கட்சியின் விருப்பத்துக்கு எதிராக நின்றதால், என்னை பதவி விலகுமாறு கேட்கின்றனர்” என்றார். 

ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானம் சர்ச்சை

தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்யவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 21-5-1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கவுரவிக்கும் வகையில் நாட்டின் மிகமிக உயரிய 'பாரத ரத்னா' விருது அவருக்கு  அளிக்கப்பட்டது. 

இந்த விருதினை திரும்பப்பெற வேண்டும் என டெல்லி சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனது தாயாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட போது, நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தை ஒடுக்க ராஜீவ் காந்தி தவறிவிட்டார் எனக்கூறி அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லி சட்ட சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது. 

ஆனால், பாரத ரத்னா விருதை திரும்பப் பெறுமாறு தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று ஆம் ஆத்மி தெரிவித்தது. தீர்மானத்தில் ராஜீவ் காந்தி தொடர்பான வாசகங்கள் கையால் எழுதப்பட்டு இருந்ததாகவும் ஒரு எம்.எல்.ஏ, தீர்மானத்தில் திருத்தம் செய்துவிட்டார் என்றும் திருத்தப்பட்ட தீர்மானத்தை இவ்வகையில் நிறைவேற்ற முடியாது எனவும் ஆம் ஆத்மி விளக்கம் அளித்தது. 


Next Story