”பதவிக்காக திருடர்கள் புனிதராக்கப்படுகிறார்கள்” பிரதமர் மோடி பதவி ஆக்சிஜன் பேச்சுக்கு சிவசேனா பதிலடி


”பதவிக்காக திருடர்கள் புனிதராக்கப்படுகிறார்கள்” பிரதமர் மோடி பதவி ஆக்சிஜன் பேச்சுக்கு சிவசேனா பதிலடி
x
தினத்தந்தி 26 Dec 2018 11:58 AM GMT (Updated: 26 Dec 2018 11:58 AM GMT)

பதவிக்காக திருடர்கள் புனிதராக்கப்படுகிறார்கள் என பிரதமர் மோடியின் பதவி ஆக்சிஜன் பேச்சுக்கு சிவசேனா பதிலடி கொடுத்து உள்ளது.

மும்பை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி சிலருக்கு பதவி என்பது ஆக்சிஜனாக உள்ளது.  அவர்களால் பதவி இல்லாமல் இருக்க முடியாது என கூறினார். இதற்கு  சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் இன்றைய தலையங்கத்தில் பதிலடி கொடுத்து உள்ளது. 

சாம்னா தலையங்கத்தில் கூறி இருப்பதாவது;-

அதிகாரம் என்ற ஆக்சிஜனை கவரும் நோக்கில் ஒரு சிலரால், அயோத்தியில் ராமரும், அரசியலில் எல்.கே.அத்வானியும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். தற்போதுள்ள அரசியல் சூழலில் ஒருசிலர் வலுக்கட்டாயமாக  வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

நல்லகாலம் வந்துவிடும் என்று கூறிவிட்டு அதைக் கொண்டுவர முடியாதவர்கள், அதிகாரத்தில் இருந்தாலும், எதிர்க்கட்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள். எதிர்க்கட்சி வரிசையில் அமரவைத்து விடுவார்களோ என்ற உணர்வு வந்துவிட்டது.

முன்னாள் பிரதமர்  வாஜ்பாய் தனது வாழ்க்கையின் பெரும்பகுதி காலத்தை எதிர்க்கட்சி வரிசையில் கழித்தார். ஆனால், சிலர் வாஜ்பாய்க்கு எதிராக இருக்கிறார்கள்.

அதிகாரம் எனும் ஆக்சிஜன் சப்ளையை உறுதி செய்ய, கூலிப்படையினர், திருடர்கள் புனிதராக்கப்படுகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற கிரிமினல்கள் வால்மீகியாக சித்தரிக்கப்படுகிறார்கள். இவை அனைத்தும்  அதிகாரத்துக்காகத்தான்.

அதிகாரத்துக்காக எங்களுடன் இந்துத்துவா கொள்கையில் கூட்டணி வைத்தார். ஆனால் 2014-ம் ஆண்டோடு உடைக்கப்பட்டு, இந்துத்துவா எனும் ஆக்சிஜன் சிலிண்டர் திருடப்பட்டது. எப்போது மக்கள் அந்த இந்துத்துவா எனும் ஆக்சிஜன் சிலிண்டருக்கு இணைப்பு கொடுக்கப்போகிறார்கள் .

கணினிகளையும், செல்போன்களையும் மத்திய அரசு வேவு பார்க்கும் செயல் என்பது உண்மையான ஜனநாயகம், சுதந்திரம் ஆகாது. தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கவேண்டுமே என்பதைத்தான் காட்டுகிறது.

இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.

Next Story