மேகதாது பிரச்சினையை பேசி தீர்க்கலாம் தமிழ்நாடும், கர்நாடகாவும் இந்தியா-பாகிஸ்தான் அல்ல பிரதமரை சந்தித்த பிறகு குமாரசாமி பேட்டி


மேகதாது பிரச்சினையை பேசி தீர்க்கலாம் தமிழ்நாடும், கர்நாடகாவும் இந்தியா-பாகிஸ்தான் அல்ல பிரதமரை சந்தித்த பிறகு குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 27 Dec 2018 11:15 PM GMT (Updated: 27 Dec 2018 11:57 PM GMT)

தமிழ்நாடும், கர்நாடகாவும் இந்தியா–பாகிஸ்தான் அல்ல, மேகதாது பிரச்சினையை பேசி தீர்க்கலாம் என்று பிரதமரை சந்தித்த குமாரசாமி தெரிவித்தார்.

புதுடெல்லி,

கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமி 2 நாள் பயணமாக டெல்லிக்கு சென்றார். நேற்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

அப்போது, மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். வறட்சி நிவாரண நிதி குறித்தும் விவாதித்தார்.

பின்னர், குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரியை சந்தித்தபோது, மேகதாது பிரச்சினை பற்றி பேச தமிழக–கர்நாடக முதல்–மந்திரிகள் கூட்டத்தை கூட்டுமாறு நான் வலியுறுத்தினேன். அதை நிதின் கட்கரி ஏற்றுக்கொண்டார். இன்னும் 10 முதல் 15 நாட்களில் அவர் கூட்டத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

தமிழ்நாடும், கர்நாடகாவும் இந்தியா–பாகிஸ்தான் அல்ல. நாம் சகோதரர்கள். இந்த பிரச்சினையை கோர்ட்டுக்கு போய் சண்டையிடாமல், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம்.

இது, சட்டரீதியாக தீர்வு காணும் பிரச்சினை அல்ல, பேச்சு மூலம் சுமுகமாக தீர்க்க வேண்டிய பிரச்சினை. எனவே, தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இதை அரசியல் ஆக்க வேண்டாம். உட்கார்ந்து பேசி தீர்வு காணலாம். இது, பெரிய பிரச்சினையே அல்ல.

காவிரி உபரி நீர், தேவையின்றி கடலில் கலப்பதை தடுக்கவே மேகதாது அணை கட்டப்படுகிறது. பருவமழை காலத்தில் 390 டி.எம்.சி. நீரை திறந்து விட்டோம். அவ்வளவு நீரும் மேட்டூர் அணையிலா இருக்கிறது?

எனவே, மேகதாது அணை கட்டுவது, கர்நாடகத்தை விட தமிழ்நாட்டுக்கே நல்லது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, பியுஷ் கோயல் ஆகியோரையும் குமாரசாமி சந்தித்தார்.


Next Story