செல்பி எடுக்க முயன்ற போது நீர் வீழ்ச்சியில் விழுந்து மாணவர் பலி


செல்பி எடுக்க முயன்ற போது நீர் வீழ்ச்சியில் விழுந்து மாணவர் பலி
x
தினத்தந்தி 31 Dec 2018 9:45 AM GMT (Updated: 31 Dec 2018 9:45 AM GMT)

செல்பி எடுக்க முயன்ற போது நீர் வீழ்ச்சியில் விழுந்து மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயுர்பாஞ்ச்,

ஒடிசா மாநிலம் மயுர்பாஞ்ச் மாவட்டத்தில் பிம்குண்ட் என்ற இடத்தில் நீர் வீழ்ச்சி ஒன்று உள்ளது. ஒடிசாவில் உள்ள மிகச்சிறந்த சுற்றுலாத்தளங்களில் ஒன்றான இந்தப்பகுதியில், வெள்ளப்பெருக்குடன் தண்ணீர் ஒடுவதை பார்க்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கூடுவர்.  இந்த சூழலில், கட்டாக்கைச்சேர்ந்த மாணவர்கள் சிலர் பிம்குண்ட் நீர் வீழ்ச்சியை ரசிக்க வந்தனர். 

மாணவர்களில் ஒருவர் மட்டும், ஆபத்தை அறியாது தண்ணீரை ஒட்டியுள்ள பாறையில் நின்று ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முற்பட்டார். அப்போது, துரதிருஷ்டவசமாக நிலை தடுமாறி தண்ணீரில் அந்த மாணவர் விழுந்தார். விழுந்த வேகத்தில், மாணவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். 

அவரை மீட்க பலர் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளில் உலகம் முழுவதும்,  செல்பி எடுக்க முற்பட்ட போது ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story