வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் ராஜஸ்தான், ம.பி.யில் ஆதரவை மறுஆய்வு செய்வோம் - மாயாவதி


வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் ராஜஸ்தான், ம.பி.யில் ஆதரவை மறுஆய்வு செய்வோம் - மாயாவதி
x
தினத்தந்தி 31 Dec 2018 1:47 PM GMT (Updated: 31 Dec 2018 1:47 PM GMT)

ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் அப்பாவி மக்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் ஆதரவை மறு ஆய்வு செய்வோம் என மாயாவதி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் சுயேட்சைகள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உதவியுடன் ஆட்சியில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்களும், ராஜஸ்தானில் 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இந்நிலையில் காங்கிரசுக்கு கோரிக்கையொன்றை மாயாவதி முன்வைத்துள்ளார். 

 எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தலித் அமைப்புகள் ஏப்ரல் இரண்டாம் தேதி    பாரத் பந்த் நடத்தியது.  அப்போது அப்பாவி மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும் அப்படியில்லையென்றால் எங்களுடைய ஆதரவை மறுஆய்வு செய்வோம் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

 பா.ஜனதா ஆட்சி செய்த உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பந்த் நடைபெற்ற போது அரசியல் மற்றும் சாதியின் அடிப்படையில் அப்பாவி மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என குற்றம் சாட்டியுள்ள மாயாவதி, புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் அரசு வழக்கை வாபஸ் பெற வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதை திரும்ப பெறுவது தொடர்பாக மறு ஆய்வு செய்ய வேண்டியதுவரும் என எச்சரிக்கையை விடுத்துள்ளார். 


Next Story