ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் தலைவர்கள் ரூ.150 கோடி பெற்றனர்: உத்தரபிரதேச முதல்-மந்திரி குற்றச்சாட்டு


ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் தலைவர்கள் ரூ.150 கோடி பெற்றனர்: உத்தரபிரதேச முதல்-மந்திரி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Jan 2019 4:15 AM IST (Updated: 1 Jan 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் தலைவர்கள் ரூ.150 கோடி பெற்றனர் என உத்தரபிரதேச முதல்-மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் ரூ.3,700 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதில் ரூ.360 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது. இதில் ரூ.150 கோடி காங்கிரஸ் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் அதிகாரிகள் ஏற்கனவே இத்தாலி கோர்ட்டால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் இத்தாலிக்கு வெளியே உள்ளதாகவும் கோர்ட்டு கூறியுள்ளது. அப்படியென்றால் அவர்கள் யார்? இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், சோனியாகாந்தி பெயரை குறிப்பிட்டதன் மூலம் காங்கிரஸ் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளது நிரூபணமாகிறது.

அனைத்து ராணுவ ஒப்பந்தங்களிலும் காங்கிரஸ் ஊழலில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் பிரச்சினையில் அதன் முகமூடி அவிழ்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்கள் உண்மையை உணர்ந்து வருகிறார்கள். அவர்கள் காங்கிரசுக்கு தண்டனை வழங்குவார்கள் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story