நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டி; நடிகர் பிரகாஷ்ராஜ்
தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போகிறேன் என நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். கடந்த 2017ம் வருடம் செப்டம்பர் 5ஆம் தேதி பெங்களூரில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள வீட்டில் வைத்து பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுகுறித்து பெங்களூருவில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசும்பொழுது, கவுரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடுவதாகவும், இதுபோன்ற விஷயத்தில் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடி என்னை விட சிறந்த நடிகர் என்று கூறினார்.
இதற்காக தனக்கு வழங்கப்பட்ட 5 தேசிய விருதுகளை திருப்பித்தரவும் தயங்க மாட்டேன் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.
தொடர்ந்து பிரதமர் மோடிக்கு எதிராக அவர் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களை வைத்து வந்துள்ளார். இதனால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு கூட தொடரப்பட்டது.
அதன்பின் நான் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன் என மைசூரு நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்றில் கூறினார்.
இந்த நிலையில், அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒவ்வொருவருக்கும் புது வருட வாழ்த்துகள். ஒரு புதிய தொடக்கம். அதிக பொறுப்புணர்வு. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் உங்களது ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிட இருக்கிறேன். தொகுதி பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். குடிமகனின் குரல் நாடாளுமன்றத்தில் கூட ஒலிக்கும் என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story