இளம்பெண்கள் சபரிமலையில் வழிபாடு: பெண்ணியவாதி திருப்தி தேசாய் பாராட்டு


இளம்பெண்கள் சபரிமலையில் வழிபாடு: பெண்ணியவாதி திருப்தி தேசாய் பாராட்டு
x
தினத்தந்தி 2 Jan 2019 3:49 PM IST (Updated: 2 Jan 2019 3:49 PM IST)
t-max-icont-min-icon

சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் வழிபட்டது சமத்துவத்திற்கு கிடைத்த வெற்றி என திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவில் நடை திறந்த நாள் முதல் அங்கு சென்ற இளம்பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில், கேரளாவைச்சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பிந்து, கனகதுர்கா ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன்  சபரிமலை கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். 18 படிகள் ஏறாமல் பின்பக்கமாக சென்று அவர்கள் வழிபட்டனர். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம்பெண்கள் நுழைவது கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்றும், இளம்பெண்கள் சபரிமலை சன்னிதானம் சென்றால் கோவில் நடையை மூடுவோம் என்றும் ஏற்கனவே பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று இளம்பெண்கள் இருவர் சபரிமலை சன்னிதானம் சென்றதை அறிந்ததும் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சசிகுமாரவர்மா அதிர்ச்சி அடைந்தார்.

இவரைப்போல கோவில் தந்திரிகள், அர்ச்சகர்களும் இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அவர்கள் இதுபற்றி கோவில் மேல்சாந்தி, தலைமை தந்திரி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் நடை உடனடியாக அடைக்கப்பட்டது. சாமி தரிசனமும் நிறுத்தப்பட்டது. பின்னர் ஒரு மணி நேர பரிகார பூஜைக்கு பின்னர் சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்

திருப்தி தேசாய் வரவேற்பு

இந்த நிலையில், பெண்ணியவாதி  திருப்தி தேசாய், சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்த இரண்டு பெண்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து திருப்தி தேசாய் கூறுகையில், “ எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும். சமத்துவத்துக்கு கிடைத்த வெற்றி. புத்தாண்டில் பெண்களுக்கு கிடைத்துள்ள புதிய தொடக்கம் இது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக வந்த திருப்தி தேசாய், கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக திருப்தி தேசாய் உட்பட 6 இளம் பெண்கள் கோவில் செல்லாமலே திரும்பிச்சென்றனர் என்பது நினைவிருக்கலாம். 

Next Story