சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம், போராட்டம் வெடித்தது, பினராயி விஜயன் நவீன அவுரங்கசீப் என விமர்சனம்


சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம், போராட்டம் வெடித்தது, பினராயி விஜயன் நவீன அவுரங்கசீப் என விமர்சனம்
x
தினத்தந்தி 2 Jan 2019 8:29 PM IST (Updated: 2 Jan 2019 8:29 PM IST)
t-max-icont-min-icon

சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  2 பெண்கள்  இன்று காலை சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலின் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. கறுப்பு உடை அணிந்து, முகத்தை மூடியவாறு சென்ற அவர்கள், 18–ம் படி வழியாக செல்லாமல் பின்புற வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றதாக தெரிகிறது. சாமி தரிசனம் முடித்து வந்த அவர்களை பாதுகாப்பு கருதி போலீசாரே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மேலும் அவர்களது வீட்டுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
 
கோவிலின் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையிலேயே பெண்கள் சபரிமலைக்கு சென்றுள்ளதாக கூறிய கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், கோவில் நடை அடைக்கப்பட்டது சட்டவிரோதம் எனவும் தெரிவித்தார்.
 
பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலையில் அய்யப்பனை  தரிசித்ததை முதல்–மந்திரி பினராயி விஜயன் உறுதி செய்தார். சபரிமலையில் தரிசனம் செய்த பெண்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் பினராயி விஜயன் கூறினார்.  ஏற்கனவே பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறது. இப்போது பெண்கள் பாதுகாப்புடன் தரிசனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் வெடித்துள்ளது.

பினராயி விஜயன் நவீன அவுரங்கசீப் என பா.ஜனதா விமர்சனம் செய்துள்ளது. பா.ஜனதா மாநில தலைவர் பிஎஸ் ஸ்ரீதரன்பிள்ளை பேசுகையில், “நவீன அவுரங்கசீப்தான் பினராயி விஜயன். அவுரங்கசீப் இந்து கோவில்களை அழித்தவர். பெண்கள் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட விதம் திட்டமிட்ட மற்றும் சதித்திட்டமாகும். மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோவிலின் பாரம்பரியத்தை அழித்துவிட்டது. இதற்கு அய்யப்ப பக்தர்களும், பொதுமக்களும் பதிலளிப்பார்கள்,” என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியும் மாநில அரசை விமர்சனம் செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் சென்னிதாலா பேசுகையில், “உண்மையை முதல்வரே ஒப்புக்கொண்டார். கோவில் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் மீது சதிதிட்டம் தீட்டப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும். பெண்கள் எங்கு தங்கியிருந்தார்கள்? பெண்கள் பினராயி விஜயனின் உத்தரவின்படி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்,” என கூறியுள்ளார். கோவிலுக்கு சென்ற பெண்கள் பக்தர்கள் கிடையாது, அவர்கள் ஆர்வலர்கள் எனவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Next Story