நாடாளுமன்றத்தில் கேள்விகளை சந்திக்க துணிச்சல் இல்லாதவர்: மோடியை பாதுகாக்க அ.தி.மு.க. எம்.பி.க்கள் முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு


நாடாளுமன்றத்தில் கேள்விகளை சந்திக்க துணிச்சல் இல்லாதவர்: மோடியை பாதுகாக்க அ.தி.மு.க. எம்.பி.க்கள் முயற்சி -  ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 Jan 2019 4:15 AM IST (Updated: 3 Jan 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் கேள்விகளை சந்திக்க மோடிக்கு துணிச்சல் இல்லை, அவரை பாதுகாக்க அ.தி.மு.க. எம்.பி.க்கள் முயற்சிக்கின்றனர் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று 193-வது விதியின் கீழ், ரபேல் விமான ஒப்பந்த பிரச்சினையை எழுப்பி பேசினார். அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி, அரங்கேற்றப்பட்ட பேட்டியில் 90 நிமிடங்கள் பேசியுள்ளார். அதிலும் ரபேல் விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. ரபேல் பிரச்சினையில், தன் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டு கிடையாது என்று அவர் கூறியது உண்மை அல்ல.

ஒட்டு மொத்த நாடும் இந்த ஒப்பந்தம் குறித்து அவரிடம் நேரடியாக கேள்வி கேட்கிறது.

பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்லிடம் இருந்து இந்த ஒப்பந்தம் பறிக்கப்பட்டது. ‘இரண்டு ஏ’ பெயர் கொண்டவரது பையில் ரூ.30 ஆயிரம் கோடியை மோடி போட்டார். அந்த நபர், மோடியின் அன்பு நண்பர்.

காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்யப்பட்ட விலையை விட 3 மடங்கு அதிக விலைக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதை பற்றி தெரிந்து கொள்வதற்காகவே, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்கிறோம். அதற்கு பா.ஜனதா பயப்பட தேவையில்லை.

இவ்வாறு ராகுல் காந்தி பேசியபோது, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தி, அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அதனால், அ.தி.மு.க. எம்.பி.க்களை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேசியதாவது:-

பிரதமர் மோடியை பாதுகாக்க அ.தி.மு.க. எம்.பி.க்கள் முயற்சிக்கிறார்கள். இங்கே அமர்ந்துள்ள ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், அ.தி.மு.க. உறுப்பினர்களின் பின்னால் ஒளிந்து கொள்கிறார். பிரதமர் தனது அறையில் ஒளிந்து கொள்கிறார். அவருக்கு நாடாளுமன்றத்துக்கு வந்து கேள்விகளை சந்திக்கும் துணிச்சல் இல்லை.

இப்போது என்னிடம் ஒரு ஆடியோ டேப் இருக்கிறது. கோவா மாநில மந்திரி விஷ்வஜித் ரானே, ரபேல் விவகாரம் தொடர்பான ஒரு கோப்பை முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தனது படுக்கை அறையில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். இந்த ஆடியோ டேப்பை போட்டுக்காட்ட சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.

அப்போது, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி குறுக்கிட்டு, “அந்த டேப் போலியானது, தில்லுமுல்லு செய்து உருவாக்கப்பட்டது. அது உண்மை என்று ராகுல் காந்தியால் அங்கீகரிக்க முடியுமா? அது பொய் என்று நிரூபணமானால், அவர் உரிமை பிரச்சினையை சந்தித்து, வெளியேற்றப்பட வேண்டி இருக்கும்” என்று கூறினார்.

அதற்கு ராகுல் காந்தி, தன்னால் அதை அங்கீகரிக்க முடியாது, சபாநாயகர் அனுமதி இல்லாமல் போட்டுக்காட்ட மாட்டேன் என்று கூறினார்.

இதனால் ஆவேசம் அடைந்த அருண் ஜெட்லி, “அது போலி என்று விஷ்வஜித் ரானே மறுத்துள்ளார். அது ராகுல் காந்திக்கே தெரியும். அதனால் பயப்படுகிறார். இந்த மனிதர் திரும்பத்திரும்ப பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இவரது குற்றச்சாட்டை பிரான்ஸ் அரசு மறுத்துள்ளது“ என்று கூறினார்.

அப்போது ஏற்பட்ட அமளியை தொடர்ந்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.


Next Story