சபரிமலை பரிகார பூஜை விவகாரம்; அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
சபரிமலை பற்றிய நீதிமன்ற உத்தரவை மீறி பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்த தந்திரி மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது.
இதனை எதிர்த்து கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. சபரிமலையிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வந்ததால் தடை செய்யப்பட்ட வயதுடைய பல பெண்கள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டு இருந்தனர்.
ஆனால் கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து (வயது 42), மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா (44) ஆகிய 2 பெண்கள் நேற்று அதிகாலையில் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர். இந்த சம்பவத்தை முதல்-மந்திரி பினராயி விஜயனும் உறுதி செய்தார்.
இதனை தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவிலை மூடி பரிகார பூஜை செய்யப்பட்டது. அதன்பின்பே கோயில் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்த தந்திரி மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் குழு சார்பில் முறையீடு செய்யப்பட்டது.
இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், விசாரிக்கப்படாமல் உள்ள மற்ற சீராய்வு மனுக்களுடன் சேர்த்தே இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story