ரபேல் ஒப்பந்தம்; ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? தம்பிதுரை கேள்வி ராகுல் காந்தி வரவேற்பு


ரபேல் ஒப்பந்தம்; ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? தம்பிதுரை கேள்வி ராகுல் காந்தி வரவேற்பு
x
தினத்தந்தி 4 Jan 2019 4:09 PM GMT (Updated: 4 Jan 2019 4:09 PM GMT)

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? என்ற தம்பிதுரையின் கேள்வியை காங்கிரஸ் தலைவர் ராகுல் வரவேற்றார்.

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு என காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை முன்னெடுக்கவும் வலியுறுத்துகிறது. விமான ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடந்த போது பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.

விமானங்களின் எண்ணிக்கை 36 ஆக குறைக்கப்பட்டது ஏன்? 
விலை ரூ. 500 கோடியிலிருந்து  ரூ.1,600 கோடியாக உயர்த்தப்பட்டது ஏன்? 
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலாக, தனியார் நிறுவனமான அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? என்று காங்கிரஸ் தொடர்கேள்வி எழுப்புகிறது. இன்று இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே கடும் வாக்குவாதம் நேரிட்டது.

இதற்கிடையே ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் தேர்ந்தெருக்கப்பட்டது ஏன்? என்ற தம்பிதுரையின் கேள்வியை காங்கிரஸ் தலைவர் ராகுல் வரவேற்றார்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகையில், பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக கூறும் மத்திய அரசு ரபேல் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை வழங்கியிருக்கலாமே என்று கேள்வி எழுப்பினார். இதனையடுத்து எக்ஸலண்ட், எக்ஸலண்ட் என்று கூறி ராகுல் காந்தி மேஜையை தட்டி பாராட்டினார்.

ராகுல் காந்தி கேள்வி எழுப்புகையில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை காங்கிரஸ் அரசு சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறீர்கள். அந்நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாக குறுப்பிடுகிறீர்கள்.  அப்படியென்றால் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்துக்கே ரபேல் விமானங்களை செய்யும் வாய்ப்பு அளித்திருக்கலாமே? இதில் அனுபவம் இல்லாத மற்றும்  நிதிச் சுமையில் இருக்கும் ரிலையன்ஸ்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். ரிலைன்சுக்கு வழங்கப்பட்டதை காங்கிரஸ் தொடர்ந்து கேள்வியாக எழுப்பி வருகிறது. சிவசேனாவும், பிஜு ஜனதாதளமும் இதே கேள்வியை எழுப்பியது.

தம்பிதுரை கேள்வி எழுப்பியதும் அவருக்கு பின்னால் இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸலண்ட், எக்ஸலண்ட் என்று கூறி  பாராட்டினார்.  மேசையை தட்டியும் வரவேற்ற அவர், யாரையோ பார்த்து கண்ணடித்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

தம்பிதுரை கேள்விக்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன்,  பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் மட்டுமே கட்டப்பட்ட நிலையில் வாங்கப்படும் என்றும் மீதமுள்ள விமானங்களை தயாரிக்க எந்த நிறுவனமும் போட்டியிடலாம். எச்ஏஎல் போட்டியிடலாம். டிஆர்டிஓ போட்டியிடலாம். வெல்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். 

ரபேல் விமானங்களை தயாரிக்கும் நிறுவனத்தை முடிவு செய்யும் நிகழ்வு வெளிப்படையானது என்றார்.

Next Story