மேகதாது அணை விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து அ.தி.மு.க., தி.மு.க. வெளிநடப்பு


மேகதாது அணை விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து அ.தி.மு.க., தி.மு.க. வெளிநடப்பு
x
தினத்தந்தி 4 Jan 2019 10:15 PM GMT (Updated: 4 Jan 2019 9:00 PM GMT)

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, மாநிலங்களவையில் இருந்து அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

புதுடெல்லி,

மேகதாது அணை விவகாரத்தை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இதனால் தொடர்ந்து அமளி ஏற்பட்டதால், மக்களவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் 31 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

எனினும் இந்த விவகாரத்தை தமிழக எம்.பி.க்கள் நேற்று மாநிலங்களவையில் எழுப்பினர். காலையில் சபை கூடியதும் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், ‘மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அளித்த அனுமதியை திரும்ப பெற வேண்டும்’, ‘எங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால், நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்’ எனக்கூறி சபையை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அவரை தொடர்ந்து பேசிய தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, மேகதாது அணைக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி அளித்திருப்பதன் மூலம் மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது என்று கூறினார். பின்னர் இந்த அனுமதியை கண்டிக்கும் வகையிலும், அதை திரும்ப பெறக்கேட்டும் அவரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.


Next Story