சபரிமலை விவகாரம்: கேரள அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்பு


சபரிமலை விவகாரம்: கேரள அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்பு
x
தினத்தந்தி 5 Jan 2019 9:41 AM GMT (Updated: 5 Jan 2019 9:41 AM GMT)

சபரிமலை விவகாரத்தில் நடந்த வன்முறை குறித்து பதிலளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா போன்ற கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தன. இதனால் சபரிமலையில் தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்களால் செல்ல முடியவில்லை. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன், அதிகாலையில் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா (வயது 44), பிந்து (42) என்ற 2 பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.

சபரிமலையில் பெண்கள் நுழைந்த விவகாரம் இந்து அமைப்புகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  குறிப்பாக கேரளாவை சேர்ந்த இந்து அமைப்புகளும், பா.ஜனதாவினரும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால்  கடந்த சில தினங்களுக்கு முன்  மாநிலம் முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் அரங்கேறின.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடத்த சபரிமலை கர்ம சமிதி என்ற அமைப்பு அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி பா.ஜனதா ஆதரவுடன் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடந்தது. இந்த முழு அடைப்பால் மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. பல இடங்களில் வன்முறையும் வெடித்தது. பாலக்காட்டில் இடதுசாரிகளின் நூலகம் ஒன்றும் சூறையாடப்பட்டது.

இந்த நிலையில், சபரிமலை விவகாரத்தால் கேரளாவில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கேரள அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Next Story