சபரிமலை விவகாரத்தில் வன்முறை தொடர்கிறது: கேரள எம்.பி., எம்.எல்.ஏ. வீடுகளில் குண்டுவீச்சு - போலீசார் கொடி அணிவகுப்பு


சபரிமலை விவகாரத்தில் வன்முறை தொடர்கிறது: கேரள எம்.பி., எம்.எல்.ஏ. வீடுகளில் குண்டுவீச்சு - போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 5 Jan 2019 10:30 PM GMT (Updated: 5 Jan 2019 9:06 PM GMT)

சபரிமலை விவகாரத்தில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், பா.ஜனதா எம்.பி. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. வீடுகளில் வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த 2-ந்தேதி பலத்த பாதுகாப்புடன் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த 3-ந்தேதி கேரளா முழுவதும் நடந்த முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதாவினரின் வீடு மற்றும் அலுவலகங்கள் மாறி மாறி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

அந்தவகையில் கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி தொகுதி எம்.எல்.ஏ.வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலக்குழு உறுப்பினருமான ஏ.என்.ஷம்சீரின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இதைத்தொடர்ந்து கட்சியின் கண்ணூர் மாவட்ட முன்னாள் செயலாளர் சசியின் வீட்டிலும் வெடிகுண்டு வீசப்பட்டது.

இந்த சம்பவத்தின்போது ஷம்சீர் மற்றும் சசி ஆகியோர் வெளியே சென்றிருந்தனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.

இதனால் அங்கு பதற்றம் நிலவி வந்த நிலையில், தலசேரி அருகே உள்ள பா.ஜனதா எம்.பி. முரளிதரனின் மூதாதயர் வீட்டில் நேற்று அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி ஓடினர். இதைப்போல கண்ணூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கும் தீ வைக்கப்பட்டது.

முரளிதரன் எம்.பி.யின் மூதாதையர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட போது, அவரது சகோதரி, கணவர் மற்றும் அவர்களின் மகள் ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் சக்தி வாய்ந்த இந்த குண்டு வெடித்ததில் பொருட்கள் சேதம் அடைந்ததாக முரளிதரன் தெரிவித்தார்.

இவர்தான் சபரிமலையில் தரிசனம் செய்த 2 பெண்களும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் எனவும், இது குறித்து தேசிய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அழிக்கோடு மண்டல பா.ஜனதா செயலாளர் பிஜு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களின் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் சந்திரசேகரன் ஆகியோரின் வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகின. இதில் சந்திரசேகரன் மற்றும் அவரது மகள் மீனா ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலசேரி ஏரியா கமிட்டி உறுப்பினர் சசீதரன் வீடு தாக்கப்பட்டதுடன், இரிட்டியை சேர்ந்த கம்யூனிஸ்டு தொண்டர் வைசாக்கும் (வயது 28) பா.ஜனதா தொண்டர்களால் தாக்கப்பட்டார். இதில் கத்திக்குத்து காயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாநிலம் முழுவதும் இத்தகைய வன்முறை சம்பவங்கள் நடந்தாலும், அரசியல் பரபரப்பு அதிகம் நிலவும் கண்ணூர் மாவட்டத்தில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

எனவே அங்கு அமைதியை ஏற்படுத்த பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களிடையே நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. இதைப்போல தலசேரியில் போலீசார் நேற்று கொடி அணிவகுப்பும் நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் பணிகளை மேற்கொண்டனர். அங்கு நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் நடந்து வரும் வன்முறை தொடர்பாக 1,700-க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


Next Story