ஆதார் அட்டையால் ரூ.90 ஆயிரம் கோடி மிச்சம் - நிதி மந்திரி அருண்ஜெட்லி தகவல்


ஆதார் அட்டையால் ரூ.90 ஆயிரம் கோடி மிச்சம் - நிதி மந்திரி அருண்ஜெட்லி தகவல்
x
தினத்தந்தி 6 Jan 2019 10:45 PM GMT (Updated: 6 Jan 2019 8:42 PM GMT)

ஆதார் அட்டையால் ரூ.90 ஆயிரம் கோடி மிச்சமாகி உள்ளதாக நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்தார்.

புதுடெல்லி,

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கி உள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு பெரும் அளவிலான தொகை மிச்சமாகி இருப்பதாக நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்தார்.

இதுபற்றி அவர் தனது முகநூல் பதிவில், ‘ஆதாரின் பயன்கள்‘ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

ஆதார் அட்டையை சமூக நலத்திட்டங்களுக்கு கட்டாயமாக்கியதன் மூலம் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிய மத்திய அரசுக்கு ரூ.90 ஆயிரம் கோடி மிச்சமாகி இருக்கிறது. மேலும் உயிருடன் இல்லாதவர்கள், போலி பயனாளிகள் ஆதார் வாயிலாக அப்புறப்படுத்தப்பட்டு இருப்பதால் இந்த சேமிப்பு சாத்தியமாகி இருக்கிறது.

இந்த ரூ.90 ஆயிரம் கோடியால் ‘ஆயுஷ்மான் பாரத்‘ மருத்துவ திட்டம் போன்ற 3 மிகப்பெரிய சமூக நலத்திட்டங்களை மத்திய அரசால் செயல்படுத்த முடியும். உலக வங்கி தனது அறிக்கையில் ஆதார் மூலம் ஆண்டுக்கு ரூ.77 ஆயிரம் கோடியை இந்தியாவால் சேமிக்க இயலும் என்று தெரிவித்து உள்ளது. நாட்டில் 99 சதவீதம் மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story